Thursday 21 November 2013

ஹனுமான்

ராகம்: பாகேஸ்வரி
தாளம் - ஆதி

பல்லவி
வாயு குமாரன் வானர வீரன்
ராமனின் தூதன் மலரடி பணிவோம்

அனுபல்லவி
அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயன்
சஞ்சலம் தீர்க்கும் சுந்தர ரூபன்

சரணம்
கன நேரத்தில் கடலைக் கடந்து
கண்ணீர் துடைத்த கருணைக் கடலே
வணங்கும் அடியார்க்கு வளமும்  நலமும்
வாரி வழங்கும் வள்ளல் அவரே

விளக்கம்:
வாயுவின் மைந்தனும், வானர வீரனும், ஸ்ரீ ராமனின் மனதுக்கு உகந்த தூதனுமான ஹனுமனின் மலரடியினை வணங்குவோம். சீதாதேவியை இலங்கைக்கு சென்று பார்த்து வருவதற்கு பல வீரர்கள் இருந்தாலும், சொல்லின் செல்வனான ஹனுமானை ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி தேர்ந்தெடுத்தார். அதனால் அவரே ராமனின் மனதிற்கு உகந்த தூதன்.

அஞ்சனையின் புத்திரனாக அவதரித்தார். அதனால் ஆஞ்சநேயன் என்று பெயர் பெற்றார். அவர் நம் மன சஞ்சலங்கள் அனைத்தையும் நீக்குவார். அவர் அழகன். அவருக்கு அவர் பெற்றோர் முதலில் வைத்த பெயர் சுந்தரன். அதனாலோ என்னவோ அனுமன் சீதையை காண இலங்கைக்கு சென்றதிலிருந்து, தேவியின் சூடாமணியை ராமனிடம் ஒப்படைக்கும் வரை உள்ள பகுதி, ஸ்ரீ மத் ராமாயணத்தில், சுந்தர காண்டம் என்று அழைக்கப்படுகிறது.

ஒரு நொடியில் மஹா சமுத்ரத்தை தாண்டி, இலங்கைக்கு சென்றார். சீதா தேவியை பார்த்து, அவர் சோகத்தை நாசம் செய்து, அவர் கண்ணீர் துடைத்தார்.
கருணைக்கடல் அவர். அவரை வணங்கும் அடியவர்களுக்கு வாழ்வில் வளம், நலம் யாவற்றையும் வாரி வாரி வழங்கும் வள்ளல் அவர்.

நடராஜர்

ஆடல் அரசின் ஆனந்த நடனம்
ஆசை தீர கண்டு களித்தோமே

நாடும் அன்பருக்கு நாளும் நல்லருள் புரியும்
நடன சபாபதி நான் மறை துதி பதி

பாடி பணியும் அன்பர் பாவங்களை களைந்து
வீடு பேறும் தந்து ஆட்கொள்ளும் தெய்வமே
தேடி கிடைக்காத தெள்ளமுதே - மால் அயன்
தேடி கிடைக்காத தெள்ளமுதே - உன்னை
அடையும் வழி ஒன்று அதுவே சிவ நாம ஸ்மரணம்

இதனை பைரவி ராகத்தில் மிஸ்ர சாபு தாளத்தில் அமைத்துள்ளேன் 

காஞ்சி காமாக்ஷி

கருணை  பொழியும் கவின்மிகு கண்கள்
குறுநகை தவழும் இளஞ்செவ் விதழ்கள்
கரும்பும் வில்லும் பாசாங் குசமும்
ஒருங்கே தரிக்கும் அருட்திரு கரங்கள்
வருகின்ற பக்தர்கள் மகிழ்வுறும் வண்ணம்
அருட்தவ கோலத்தில் அழகாய் அமர்ந்து
திருவருள் புரியும் ஏகாம்பர நாயகி
உனைத் தொழுவார்க்கு ஒருதீங் கில்லையே