Showing posts with label Devi. Show all posts
Showing posts with label Devi. Show all posts

Friday, 24 August 2018

வரலக்ஷ்மி - Varalakshmi

வரலக்ஷ்மி அன்னைக்கு என் பாமாலை.
An offering to Mother Varalakshmi.


பாடலைக் கேட்க, கீழே உள்ள இணைப்பை அழுத்தவும் / To listen click the below link

https://drive.google.com/open?id=1-Bs5jUuj4ruQgIsL5z4n-Y_CVrkqOijX

பாடல் வரிகள்:

ராகம்: ஹம்சநாதம்
தாளம்: ஆதி

பல்லவி
வரலக்ஷ்மி தாயே வரமருள் வாயே
சரணடைந்தேன் உன்றன் சரண கமலத்திலே

அனுபல்லவி
சுரர் அசுரர் முனிவர் ஞானியர் மானிடர்
கரம் குவித்து நாளும் கனிந்துனை ஏத்திட

சரணம்
பரவாசு தேவன் மருவும் மகாராணி
பரிபூர்ண சந்த்ர வதனி பராத்பரி
தருவதில் உனக்கு நிகரெவர் உண்டம்மா?
தருமம் வழுவாத நிலையையும் நிதியையும்

தருமம் வழுவாத நிலை, நிதி - அறவழியில் நிற்றல் மற்றும் அறவழியில் பொருள் ஈட்டல்

பரவாசுதேவன் - பரம்பொருளான வாசுதேவன்.

பிரும்மம், ஐந்து வகையில் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளும் என்று வைஷ்ணவ சம்பிரதாயத்தில் உள்ளது. அவை, பர, வ்யூஹ, விபவ, அந்தர்யாமி, அர்ச்சம்.

பர என்பது - வைகுண்டம் / பரமபதம்.
வ்யூஹம் - பாற்கடல்.
விபவம் - அவதாரம்.
அந்தர்யாமி - பக்தனின் உள்ளம்.
அர்ச்சம் - அர்ச்சாவதாரமாக கோயில்களில் காணப்படும் ரூபம்.

வைகுண்டத்தில் இருக்கும் மகாவிஷ்ணு பர வாசுதேவன்.

-------------------------------------------------------------------------------------------------

Lyrics and meaning:

Raagam - Hamsanadham
Talam - Adhi

Pallavi
Varalakshmi thAyE varamaruLvAyE
SaraNadaindhEn undRan charaNa kamalatthilE

Anupallavi
Surar asurar munivar gnaaniyar maanidar
karam kuvitthu naaLum kanindhunai yEtthida

Charanam
Para vAsudEvan maruvum mahA raaNi
paripoorNa chandra vadhani parAtpari
tharuvadhil unakku nigar evar uNdammA?
dharumam vazhuvAtha nilaiyaiyum nidhiyaiyum

Meaning:
Oh Mother! Varalakshmi! bestow your blessings. I surrender to your lotus feet.

Devas, Asuraas, Saints, Gnanis and People, daily sing your glory with folded hands.

You are the beloved queen of Para VasudEva.
Your face is like the full moon. You are the greatest of greats.
Is there any one equal to you, who can give the wealth in righteous way and the path of righteousness?

Para vasudevan - In Sri Vaishnavam, the supreme brahman manifests itself in five different forms - para, vyuha, vibhava, antaryaami and archa.

Para - paramapatham or vaikuntam.
vyuha - parkkadal or milky ocean (ksheeraabdhi).
vibhava - avatarams.
antaryaami - within our soul.
archa - in temples.

The form of Brahmmam in vaikunta is para vasudevan.

Saturday, 12 March 2016

சுகந்த குந்தலாம்பிகா

ராகம்: நாட்டைக்குறிஞ்சி
தாளம்: ஆதி (2 கலை)

பல்லவி:
சுகந்த குந்தலாம்பிகே ஜகதம்பிகே
சுகப்ரதாயிகே ஜனனி மாமவ

அனுபல்லவி:
சகலே சகலலோகநாயிகே
சகலகலாநிபுனே வரதே

சரணம்:
பரிபூர்ண சந்த்ர வதனே
ஹரி சோதரி கிரிராஜ தனயே
த்ரிசிர கிரீஷ நாயிகே லலிதே
சாரமுனி சேவித மாத்ருபூத ஜாயே

பொருள்:
சுகந்தகுந்தலாம்பிகே - வாசம் நிறைந்த கூந்தலை உடைய அம்பிகே.

அம்பாளின் கூந்தலுக்கு இயற்கையாகவே நறுமணம் உண்டு. ஸ்ரீ லலிதா த்ரிசதியில், 30-வது நாமம் - ஏல சுகந்தி சிகுராயை நம: என்று வருகிறது. ஏலக்காய் வாசனை நிறைந்த கூந்தல் உடையவள் என்று பொருள்.

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில், 13 வது நாமம் - சம்பக-அசோக-புன்னாக-சௌகந்திக-லசத்கசாயை நம: என்று வருகிறது. சம்பகம், அசோகம், புன்னாகம், சௌகந்திகம் ஆகிய மலர்களின் வாசத்தை மிஞ்சும் வாசம் நிறைந்த கூந்தல் உடையவள் என்று வர்ணிக்கிறது. இம்மலர்கள், தங்களின் வாசத்தினை பெருக்கிக்கொள்ளவேண்டும் என்பதற்காக அம்பாளின் தலையில் இருக்கவேண்டும் என்று வேண்டியனவாம். அதற்காக அம்பாள் கருணையோடு அவற்றை தன் தலையில் சூடியுள்ளாள்.

சௌந்தர்ய லஹரி - 43 வது ஸ்லோகம்
துனோது த்வாந்தம் ந: துலித-தலித-இந்தீவர-வனம்
கன-ஸ்நிக்த-ச்லக்ஷ்ணம் சிகுர நிகுரும்பம் தவ சிவே
யதீயம் ஸௌரப்யம் ஸஹஜம்-உபலப்தும் ஸுமனஸோ
வஸந்த்யஸ்மின் மன்யே வலமதன-வாடீ-விடபினாம்

சொல் - பொருள்:
சிவே - பரமசிவனின் பத்தினியே!
துலித-தலித-இந்தீவர-வனம் - மலர்ந்த கறுநெய்தல் காடு போல் பிரகாசிப்பதும்,
கன-ஸ்நிக்த-ச்லக்ஷ்ணம் - அடர்ந்த-வழவழப்பான-மென்மையான,
தவ சிகுர நிகுரும்பம் - உனது கேச பாரம்,
ந: - எங்களுடைய
த்வாந்தம் - அக இருளை
துனோது - போக்கட்டும்.

யதீயம் - அதில் உள்ள
ஸஹஜம்  - இயற்கையான
ஸௌரப்யம் - வாசனையை
உபலப்தும் - அடைய விரும்பி
வலமதன - இந்த்ரனுடைய
வாடீ-விடபினாம் - நந்தவனத்தில் உள்ள மரங்களின்
ஸுமனஸ: - புஷ்பங்கள்
அஸ்மின் - அந்த கேசபாரத்தில்
வஸந்தி - வசிக்கின்றன
மன்யே - என நினைக்கிறேன்

விளக்கம் நன்றி: சௌந்தர்ய லஹரி பாஷ்யம் - ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம் - ஸ்ரீ அண்ணா அவர்கள்.

அபிராமி பட்டர், கனம் தரும் பூங்குழலாள் என்று பாடியுள்ளார்.

இவ்வாறு அன்னையின் கூந்தலுக்கு இயற்கையாகவே மனம் உண்டு என்பதை நக்கீரர் அறிந்திருந்தாலும், மாயையினால் அவர் அதனை மறுத்தார். சிவபெருமானையும் உத்தேசிக்காது மறுத்தார். அதனை துடைதுக்கொள்ளவே, அடுத்த பிறவியில், நக்கீரர், ஸ்ரீ பாஸ்கரராயராக பிறந்து, ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாஷ்யம் செய்தார்.

ஜகதம்பிகே - ஜகத்திற்கு தாயே

சுகப்ரதாயிகே - சுகங்களை அள்ளித் தருபவளே

ஜனனி மாமவ (மாம் அவ) - தாயே, என்னை (மாம்) காப்பாய் (அவ).

சகலே - எல்லாமும் நீயே

சகலலோகநாயிகே - எல்லா உலகினையும் ஆள்பவள் நீயே (பூ, புவ, சுவ, ஜன, தப, மஹ, சத்ய ஆகிய மேல் 7 உலகங்கள் மற்றும் அதல, விதல, சுதல, ரஸாதல, தலாதல, மஹாதல, பாதாள ஆகிய கீழ் 7 உலகங்கள்)

சகல கலா நிபுனே - அனைத்து கலைகளிலும் வல்லவள் அம்பாள்.

வரதே - கலைகளை பக்தர்களுக்கு அளிப்பவள்.

சுகந்த குந்தலாம்பாளை வணங்கினால் ஆயக்கலைகள் 64-ம் நம்மிடம் வந்தடையும். சதுஸ் சஷ்டி கலாமயீ என்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் அம்பாளை அழைக்கிறது.

பரிபூர்ண சந்த்ரவதனே - பௌர்ணமி நிலவினைப் போன்ற அழகிய முகம் உடையவளே. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் சாரு சந்த்ர நிபானனா என்று அழைக்கிறது.

ஹரி சோதரி - ஹரி என்னும் விஷ்ணுவின் சஹோதரியே

கிரிராஜ தனயே - மலையரசனின் புதல்வியே

த்ரிசிரகிரீஷ நாயிகே - திரிசிர மலை நாயகனின் நாயகியே

லலிதே - விளையாட்டாக அனைத்தையும் நடத்துபவளே

சாரமுனி சேவித மாத்ருபூத ஜாயே - சார முனி வணங்கும் மாத்ருபூதேஸ்வரரின் மனதிற்கு மகழ்ச்சி அளிப்பவளே.

சாரமுனி என்னும் மகாமுனிவர், , தன் உடலின் இயலாமையால்  மலை மேல் உள்ள ஈசனை காண முடியவில்லையே என்று தாபப்பட்டுக்கொண்டார். அவரின் விருப்பத்திற்காக அதே மாத்ருபூதேசன், கீழே ஸ்ரீ நாகநாதராக, நந்தி கோவில் தெருவில் உள்ள கோவிலில், இன்றும் காட்சித் தருகிறார். நகநாதர் என்றே அவரின் பெயர். நக என்றால் மலை. நகநாதர் என்ற பெயர் மருவி நாகநாதர் என்றானது. இது ப்ரம்மாண்ட புராணத்தில், த்ரிசிரகிரி மாஹாத்மியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே சாரமுனிவரின் சிரத்தில் தோன்றிய வெண்ணாவல் மரநிழலின் கீழே, அப்பு லிங்கமாக, ஸ்ரீ ஜம்புகேஸ்வரர், திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள திருவானைக்கா என்னும் ஸ்தலத்தில் அருள்பாலிக்கிறார்.

திருச்சிராப்பள்ளி என்னும் ஸ்தலத்தில் ஸ்ரீ கல்யாண மாத்ருபூதேஸ்வரர் என்னும் தாயுமான ஸ்வாமியின் தேவிக்கு, மட்டுவார்குழலி என்று மற்றொரு பெயர் உண்டு. தாயுமான ஸ்வாமிக்கு முதலில் ஜவ்வந்தி நாதர் என்றே பெயர் இருந்தது. ஜவ்வந்தி மலர்கள் நிறைந்த நந்தவனம் சுற்றுவட்டார பகுதிகளில் நிறைந்து இருந்ததால் அவ்வாறு அழைக்கப் பெற்றார். ஸ்வாமிக்கு ஜவ்வந்தி மலர்கள் என்றால் அலாதி ப்ரியம்.

ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் திருச்சிராப்பள்ளி ஈசன் மீது ஸ்ரீ மாத்ருபூதம் என்ற பாடல் பாடியுள்ளார். அதில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சுவாஸித நவ ஜவந்தி புஷ்ப விகாச ப்ரிய ஹ்ருதயம் - அதாவது நல்ல வாசனை நிறைந்த புதியதாய் மலர்ந்த ஜவ்வந்தி பூவின் நறுமணத்தில் நாட்டமுள்ள இதயம் உடையவர் என்று பொருள்.

ரத்னாவதி என்னும் வைஸ்ய குல பெண்ணிற்கு, ஸ்வாமியே நேரில் வந்து, ரத்னாவதியின் தாய் போல் வேடம் தரித்து, ப்ரசவம் பார்த்து, அழகிய ஆண் மகனை ரத்னாவதி ஈன்றெடுக்க உதவியதால், தாயுமானவர் (அ) மாத்ருபூதேஸ்வரர் என்று பெயர் பெற்றார். ஸ்ரீ தீக்ஷிதர் மேலே குறிப்பிட்ட க்ருதியில் வைஸ்யஜாதி ஸ்திரீ வேஷ தரணம் என்று பாடியுள்ளார். வைஸ்யஜாதி பெண் வேடம் பூண்டவர் என்று பொருள்.

ஸ்ரீ லலிதா த்ரிசதி, நக்கீரர், சாரமுனி பற்றிய தகவல்கள் நன்றி:
திரு S.பாலசுப்ரமணியன் (கோனேரிராஜபுரம் - பெங்களூரு)

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Saturday, 12 December 2015

அம்பாள்

ராகம்: கானடா
தாளம்: ஆதி

பல்லவி
அழைத்த மறு கனம் வருவாயே (நான்)
மழையென அருளை பொழிவாயே தாயே

அனுபல்லவி
பிழை பல செய்தாலும் பொறுத்தருள்வாயே
குழந்தையாம் என்னை பரிவோடு அணைப்பாயே

சரணம்
அகந்தை மமதை தீமை அழிப்பாயே
அடக்கம் நன்னடத்தை அளிப்பாயே
இக பர சுழற்சிகள் போதும் தாயே
இனி என்னை உன்னுள் எற்றுக்கொள்வாயே

பொருள்:
கருணைக்கடலாம் பராசக்தி, நம் யாவருக்கும் அன்னை. அன்னையை வேண்டுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

அன்னையின் பக்தன் (நாம்) அழைத்த மறு நொடி, அன்னை வருவாள். மழையென தன் அருளை பொழிவாள்.

மனிதன் என்றால் பிழை செய்வது அவனது குணம். To Err is human, To Forgive is Divine என்று ஒரு ஆங்கில பழமொழி உண்டு. நம் சனாதன தர்மத்திலும்

கர சரண க்ருதம் வாக் காய ஜம் கர்ம ஜம் வா
ஷ்ரவண நயன ஜம் வா மானசம் வா அபராதம்
விஹிதம் அவிஹிதம் வா சர்வம் ஏதத் க்ஷமஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ சம்போ

என்ற ஒரு ஸ்லோகம் உண்டு. இதில் என் கைகள், கால்கள், செயல்கள், பேச்சு, உடல், காது, கண், மனம் இவற்றாலும், இதில் கூறப்படாத வேறு வழியாலும், தெரிந்தும், தெரியாமலும் செய்த தவறுகளை, கருணாமூர்த்தியான சம்போ, மஹாதேவா, நீ பொறுத்தருள வேண்டும் என்று கூறுவோம்.

அதுபோல, இந்த கீர்த்தனையில், அம்பாளை நாம் செய்த பிழைகளை பொறுத்தருள வேண்டும் என்று வேண்டுகிறோம். மேலும் அன்னையின் குழந்தையாம் நம்மை, பரிவோடு அணைத்துக் கொள்ளுமாறு விண்ணப்பிக்கிறோம்.

நாம் நினைக்கலாம், "தெரியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு உண்டு. தெரிந்தே செய்த தவறை எப்படி மன்னிக்க முடியும்? மன்னிப்பு வாங்கிக்கொண்டு மீண்டும் தவறு செய்தால் என்ன செய்வது?" என்று. மனிதனிடத்தில் தெரிந்து செய்த தவறுக்கு மன்னிப்பு கிடையாது. ஆனால் தெய்வத்திடம் சரணாகதி என்று அடைந்து விட்டால், நிச்சியம் மன்னிப்பு உண்டு. ஒரு முறை கடவுளை வணங்கி மன்னிப்பு கேட்டுவிட்டால், மீண்டும் நம்மால் தவறு செய்ய இயலாது. இது சத்தியம். அதுவே கடவுளின் மகிமை.

நம்மிடம் குடிகொண்டுள்ள அஹங்காரம், மமகாரம், மற்ற தீய குணங்களை அழிக்குமாறும், அடக்கம், நன்னடத்தை இவற்றை அளிக்குமாறும் அன்னையிடம் வேண்டுகிறோம்.

இக பர சுழற்சிகள் (பிறப்பு - இறப்பு),

புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனி ஜடரே சயனம்
இஹ சம்சாரே பஹு தூஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே

என்று பஜ கோவிந்த ஸ்தோத்திரத்தில் ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாள் கூறியது போல், சம்சாரத்திலிருந்து விடுவிக்க வேண்டுகிறோம். சுழற்சி போதும் என்று கூறுகிறோம்.

சுழற்சி நின்ற பின்னர், தன்னுள்ளேயே நம்மை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கிறோம். இதுவே ஸாயுஜ்ய முக்தி எனப்படும். மிக உயர்ந்த பதவி ஸாயுஜ்ய பதவி. அத்வைத நிலை அதுவே. அஹம் பிரஹ்மாஸ்மி, தத் த்வம் அஸி, என்ற மஹா வாக்யங்களின் சாரம் அதுவே.

பவானி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் ஸ கருணாம் 
இதி ஸ்தோதும் வாஞ்சம் கதயதி பவானி த்வம் இதி ய:
ததைவ த்வம் தஸ்மை திசஸி நிஜ ஸாயுஜ்ய பதவீம் 
முகுந்த ப்ரம்மேந்திர ஸ்புட மகுட நீராஜித பதம் 

என்று சௌந்தர்ய லஹரியில் 22-வது ஸ்லோகம். 

"பவானி, நீ உன் பக்தன் மீது கடைக்கண் பார்வையால் கருணை பொழி" என்று ஒருவன் வேண்ட நினைத்து, "பவானி, நீ.." என்று கூறிய உடன், அவனுக்கு, "நீயே பவனி" என்று ஸாயுஜ்ய பதவியை கொடுத்து விடுகிறாய். இந்த பதவி விஷ்ணு, பிரம்மா, இந்திரன் போன்றோர் அன்னையின் பாதத்தை தங்கள் மகுடத்தில் உள்ள ரத்னங்களால் அபிஷேகம் செய்து பின் பெற்றனர். என்னே உனது கருணை!? என்று சங்கரர் மிக வியந்து போற்றுகிறார்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Thursday, 21 November 2013

காஞ்சி காமாக்ஷி

கருணை  பொழியும் கவின்மிகு கண்கள்
குறுநகை தவழும் இளஞ்செவ் விதழ்கள்
கரும்பும் வில்லும் பாசாங் குசமும்
ஒருங்கே தரிக்கும் அருட்திரு கரங்கள்
வருகின்ற பக்தர்கள் மகிழ்வுறும் வண்ணம்
அருட்தவ கோலத்தில் அழகாய் அமர்ந்து
திருவருள் புரியும் ஏகாம்பர நாயகி
உனைத் தொழுவார்க்கு ஒருதீங் கில்லையே 

Friday, 8 October 2010

மீனாக்ஷி

மீனாக்ஷி கருணா கடாக்ஷி
சகல லோக சாக்ஷி தேவி

வனஜாக்ஷி வாமதேவ மனோஹரி
வந்தனம் சரணம் ரக்ஷிம்சு தேவி

மலையத்வஜ பாண்ட்யராஜ குமாரி
மதங்க முனி புத்ரி மாதங்கி
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி சுககரி
ஹ்ரீம்கார பீஜ மந்த்ரேச்வரி

அர்த்தம்:

தேவி மீனாக்ஷி, கருணை ததும்பும் கண்கள் உடையவளே, அனைத்து உலகிற்கும் (அதல, விதல முதல் பாதாள  - பூமி முதல் சத்ய லோகம்) நீயே சாட்சி.

 நீல நிற தாமரை (வனஜா) போன்ற கண்கள் உடையவளே, வாமதேவனின்  (சிவன்)  மனத்திற்கு இனியவளே, உன்னை வணங்கி சரணடைகிறேன், என்னை காப்பாட்ட்றுவாய். [வாம - அழகு]

மீனாக்ஷி பற்றிய பிற குறிப்புகள்:

1. மலையத்வஜ பாண்டியனின் புதல்வி.
2. முற்பிறவியில், மதங்க முனியின் புதல்வி மாதங்கி.
3. ராஜராஜேஸ்வரி - அரசர்களுக்கெல்லாம் அரசி.
4. சுககரி - கையில் கிளியினை வைத்திருப்பவள் (சுக - கிளி).
5. ஸ்ரீ வித்யா உபாசனையில் முக்கியமானது ஹ்ரீம்கார பீஜாக்ஷரம். அந்த பீஜ மந்த்ரத்தின் நாயகி.

பாடலை கேட்க:


Check this out on Chirbit