Saturday, 12 December 2015

அம்பாள்

ராகம்: கானடா
தாளம்: ஆதி

பல்லவி
அழைத்த மறு கனம் வருவாயே (நான்)
மழையென அருளை பொழிவாயே தாயே

அனுபல்லவி
பிழை பல செய்தாலும் பொறுத்தருள்வாயே
குழந்தையாம் என்னை பரிவோடு அணைப்பாயே

சரணம்
அகந்தை மமதை தீமை அழிப்பாயே
அடக்கம் நன்னடத்தை அளிப்பாயே
இக பர சுழற்சிகள் போதும் தாயே
இனி என்னை உன்னுள் எற்றுக்கொள்வாயே

பொருள்:
கருணைக்கடலாம் பராசக்தி, நம் யாவருக்கும் அன்னை. அன்னையை வேண்டுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

அன்னையின் பக்தன் (நாம்) அழைத்த மறு நொடி, அன்னை வருவாள். மழையென தன் அருளை பொழிவாள்.

மனிதன் என்றால் பிழை செய்வது அவனது குணம். To Err is human, To Forgive is Divine என்று ஒரு ஆங்கில பழமொழி உண்டு. நம் சனாதன தர்மத்திலும்

கர சரண க்ருதம் வாக் காய ஜம் கர்ம ஜம் வா
ஷ்ரவண நயன ஜம் வா மானசம் வா அபராதம்
விஹிதம் அவிஹிதம் வா சர்வம் ஏதத் க்ஷமஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ சம்போ

என்ற ஒரு ஸ்லோகம் உண்டு. இதில் என் கைகள், கால்கள், செயல்கள், பேச்சு, உடல், காது, கண், மனம் இவற்றாலும், இதில் கூறப்படாத வேறு வழியாலும், தெரிந்தும், தெரியாமலும் செய்த தவறுகளை, கருணாமூர்த்தியான சம்போ, மஹாதேவா, நீ பொறுத்தருள வேண்டும் என்று கூறுவோம்.

அதுபோல, இந்த கீர்த்தனையில், அம்பாளை நாம் செய்த பிழைகளை பொறுத்தருள வேண்டும் என்று வேண்டுகிறோம். மேலும் அன்னையின் குழந்தையாம் நம்மை, பரிவோடு அணைத்துக் கொள்ளுமாறு விண்ணப்பிக்கிறோம்.

நாம் நினைக்கலாம், "தெரியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு உண்டு. தெரிந்தே செய்த தவறை எப்படி மன்னிக்க முடியும்? மன்னிப்பு வாங்கிக்கொண்டு மீண்டும் தவறு செய்தால் என்ன செய்வது?" என்று. மனிதனிடத்தில் தெரிந்து செய்த தவறுக்கு மன்னிப்பு கிடையாது. ஆனால் தெய்வத்திடம் சரணாகதி என்று அடைந்து விட்டால், நிச்சியம் மன்னிப்பு உண்டு. ஒரு முறை கடவுளை வணங்கி மன்னிப்பு கேட்டுவிட்டால், மீண்டும் நம்மால் தவறு செய்ய இயலாது. இது சத்தியம். அதுவே கடவுளின் மகிமை.

நம்மிடம் குடிகொண்டுள்ள அஹங்காரம், மமகாரம், மற்ற தீய குணங்களை அழிக்குமாறும், அடக்கம், நன்னடத்தை இவற்றை அளிக்குமாறும் அன்னையிடம் வேண்டுகிறோம்.

இக பர சுழற்சிகள் (பிறப்பு - இறப்பு),

புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனி ஜடரே சயனம்
இஹ சம்சாரே பஹு தூஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே

என்று பஜ கோவிந்த ஸ்தோத்திரத்தில் ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாள் கூறியது போல், சம்சாரத்திலிருந்து விடுவிக்க வேண்டுகிறோம். சுழற்சி போதும் என்று கூறுகிறோம்.

சுழற்சி நின்ற பின்னர், தன்னுள்ளேயே நம்மை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கிறோம். இதுவே ஸாயுஜ்ய முக்தி எனப்படும். மிக உயர்ந்த பதவி ஸாயுஜ்ய பதவி. அத்வைத நிலை அதுவே. அஹம் பிரஹ்மாஸ்மி, தத் த்வம் அஸி, என்ற மஹா வாக்யங்களின் சாரம் அதுவே.

பவானி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் ஸ கருணாம் 
இதி ஸ்தோதும் வாஞ்சம் கதயதி பவானி த்வம் இதி ய:
ததைவ த்வம் தஸ்மை திசஸி நிஜ ஸாயுஜ்ய பதவீம் 
முகுந்த ப்ரம்மேந்திர ஸ்புட மகுட நீராஜித பதம் 

என்று சௌந்தர்ய லஹரியில் 22-வது ஸ்லோகம். 

"பவானி, நீ உன் பக்தன் மீது கடைக்கண் பார்வையால் கருணை பொழி" என்று ஒருவன் வேண்ட நினைத்து, "பவானி, நீ.." என்று கூறிய உடன், அவனுக்கு, "நீயே பவனி" என்று ஸாயுஜ்ய பதவியை கொடுத்து விடுகிறாய். இந்த பதவி விஷ்ணு, பிரம்மா, இந்திரன் போன்றோர் அன்னையின் பாதத்தை தங்கள் மகுடத்தில் உள்ள ரத்னங்களால் அபிஷேகம் செய்து பின் பெற்றனர். என்னே உனது கருணை!? என்று சங்கரர் மிக வியந்து போற்றுகிறார்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Monday, 21 September 2015

முருகன்

ராகம்: காம்போஜி
தாளம்: ஆதி

பல்லவி

அருள்வதைத் தவிர உனக்கென்ன வேலை?
திருக்குமரா முருகா சரவணபவ குஹா

அனுபல்லவி

ஒரு கணமும் மறவாதுன்னை போற்றி
உருகி தவிக்கும் உனது அடிமைக்கு விரைந்து  (அருள்வதை)

சரணம்

மூவாறு விழிகளில் ஒரு விழி பார்த்தாலும்
ஈராறு செவிகளில் ஒரு செவி கேட்டாலும்
ஒருமுறை நீ உன் கரம் ஒன்றை அசைத்தாலும்
இருள் அது விலகும் இதற்கேன் தாமதம்
இருள் அது நீங்கும் இதற்கேன் தாமதம் (அருள்வதை)

குறிப்பு:

இப்பாடல் உரிமையோடு, முருகனிடம் கேட்பதாக எழுதியுள்ளேன்.

மூவாறு - 3 x 6 = 18 விழிகள்
ஈராறு - 2 x 6 = 12 செவிகள்

முருகன், சிவனிடமிருந்து தோன்றியவர். சிவனின் 5 முகங்களான சத்யோஜாதம், தத்புருஷம், ஈசானம், அகோரம், வாமதேவம் மற்றும் 6-வது முகமான அதோ முகம் (கண்களுக்கு புலப்படாத முகம்) ஆகியவற்றிலிருந்து தோன்றிய தீப்பொறிகள் பிரம்மாவின் கரங்களில் வீழ்ந்தன.

பிரம்மனால் அந்த வெப்பத்தினை தாங்க இயலாததால், அம்பாள் வாங்கிக்கொண்டு, சரவணப் பொய்கையில் விட்டாள். அங்கே மலர்ந்திருந்த 6 தாமரைகள் அவற்றை ஏற்றுக்கொண்டன. 6 குழந்தைகளாயின அப்பொறிகள்.

பின் கார்த்திகை பெண்கள் அறுவர் 6 குழந்தைகளையும் வளர்த்து வந்தனர். உரிய நேரம் வந்த போது அம்பாள் ஆறு குழந்தைகளை ஒரு உடலாக இணைத்து, கால்கள் 2, முகங்கள் 6, கரங்கள் 12, செவிகள் - 12, கண்கள் 18 கொண்ட அழகிய ஆறுமுகனாக, ஷன்முகனாக வடிவம் கொடுத்தாள்.

சிவனுக்கு 3 கண்கள். சிவகுமாரனுக்கு 3 x 6 = 18 கண்கள். ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதரும் தான் இயற்றிய சுப்ரமண்யேன ரக்ஷிதோஹம் என்ற சுத்த தன்யாசி ராக கீர்த்தனையில் - அஷ்டாதச லோசனா கண்டேன என்று 18 கண்கள் கொண்ட கழுத்துடைய முகத்தோனால் காக்கப்படுகின்றேன் என்று பாடியுள்ளார்.

மற்றபடி பாடலில் உள்ளவை நேராக புரிந்துக் கொள்ளக் கூடியவையே.

பாடல் கேட்க:


Check this out on Chirbit

Wednesday, 15 July 2015

ஷண்முக ஸ்வரஜதி

ராகம்: கம்பீர நாட்டை
தாளம்: ஆதி

பல்லவி 
பா ;   மா பா         க ம ப ம க ஸ க ம |
ஷண்முகா------கஜ முக சோ-தர 
ப நி ப     ஸா நி   ப நி   | ப       பா   ம       க ஸ க ம ||
அன்பும் பண்பும்  அறி வும்  திறமும் நல்குவாய் 

அனுபல்லவி 
ப நி ப ப      மா  ம ப ம ம   கா        க ம க க|
அறுபடை வீ   டினில் அமர்ந்த   அறுமுக 
ஸ ஸா   ப பா ஸ  | ஸா  ;நி ப       ம க     ஸ க ம ||
செந்தில் நாதா வே லா   தேவர் குறை தீர்த்தவனே 

சரணம் 
ப நி ப---ம ப ம ----க ம க  ஸ க ஸ; ம க ஸ; |
கர்வம் கொண்ட அசுரர் குலத்தை கடிந்து 
ப ம  க ஸ; ---நி ப ம க ஸ; | ஸ நி---ப ம ----- க ஸ க ம ||
போர்புரிந்து அழித்தவன்  முக்தியையும் அளித்தவன் 

ப. பா     ப ம        ம ப ,   ம ம ப ம,  ப ம ம க |
வேலா-யுதத்தினால் அடியவர் வினைகளை 
க ஸ      ம க    ப ம           நி ப | ஸ நி ப ம      க ஸ க ம ||
களைந் தறுத் தெரிந்து பின்   ஆனந்தமே அருள்பவன் 

நீ நி ஸா   நி நி ஸா  நி ஸா நி நி பா |
மாதவன் மரு  கா    திரு  மு  ருகா 
ப நி ப ஸா நி ப ம பா| ம நி ப ம க ஸ க ம||
மனித குலம் உயர     நல்வழி காட்டுவாய் 

ஸா;; ஸா நி நி ப   ப ம ம க       ஸ|
என்....மனதினுள் வந்தமர்ந்து அ  
க ஸா, நீ | ப ம க        ஸ கா ம ப நி ||
தை நீ , ஏ  ழாம்படைவீடாக்கி கொள்வாய்  
ஸா   நீ    ப ------நீ   பா    ம -- பா ம க       மா க ஸ|
உண்மையும் நேர்மையும் சோர்வின் மையும் சகிப்பு 
ம க ம ப           நி ப ப ம             | க ஸ க க மா ;; ||
தண்மையும் பொறுமையும் நீ அருள்வாய் 
ப நி ப     ப நி ப ப ம    ம ப ம  ம ப ம ம க |
சரணம் சரணமென உனது திருவடியை 
க ம க   க ம க க ஸ                  | நி ஸ க ம பா||
இறுக பற்றிக்கொண்டேன்    அருள் புரிவாய் 
 க ம ப நி ப        ஸா நீ ஸ          நி ஸ நி நி  ஸ நி ப நி |
பிரணவத்தின் பொருளினை அரனுக்கு போதித்த 
ஸா ஸா நி ப ம | பா பா ம க ஸ நி ஸ க ம ||
சுவாமி நாதா       சுப்ரமண்யா    குருபர  (ஷண்முகா)

இந்த கம்பீர நாட்டை ஸ்வரங்கள், நான் சிறு வயதில் திருமதி. வேதவல்லி (திருச்சி) அவர்களிடம் சொல்லிக்கொண்ட ஜதீஸ்வரம். அதன் ஸ்வரங்களுக்கேற்ப முருகன் மீது பாடல் எழுத அவர் அருள்புரிந்தார்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Thursday, 23 January 2014

சக்கரத்தாழ்வார்

நமஸ்தே ஸ்ரீ சுதர்ஷனா
ஸஹஸ்ர நயன வதனா

ஸஹஸ்ராதித்ய ஸங்காஷா
ஸகல லோக ஸம்ரக்ஷகா

ஸ ஹ ஸ் ர ஹும் பட்   ஷடாக்ஷரா
ஸகல தத்வ ப்ரதிஷ்டிதா
சக்ரராஜா மஹாதேஜா
சரணம் சரணம் ஸ்வப்ரகாஷா

இப்பாடல் சக்ரவாக ராகம், ரூபக தாளம் (சதுச்ர ஜாதி). 

Thursday, 21 November 2013

ஹனுமான்

ராகம்: பாகேஸ்வரி
தாளம் - ஆதி

பல்லவி
வாயு குமாரன் வானர வீரன்
ராமனின் தூதன் மலரடி பணிவோம்

அனுபல்லவி
அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயன்
சஞ்சலம் தீர்க்கும் சுந்தர ரூபன்

சரணம்
கண நேரத்தில் கடலைக் கடந்து
கண்ணீர் துடைத்த கருணைக் கடலே
வணங்கும் அடியார்க்கு வளமும்  நலமும்
வாரி வழங்கும் வள்ளல் அவரே

விளக்கம்:
வாயுவின் மைந்தனும், வானர வீரனும், ஸ்ரீ ராமனின் மனதுக்கு உகந்த தூதனுமான ஹனுமனின் மலரடியினை வணங்குவோம். சீதாதேவியை இலங்கைக்கு சென்று பார்த்து வருவதற்கு பல வீரர்கள் இருந்தாலும், சொல்லின் செல்வனான ஹனுமானை ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி தேர்ந்தெடுத்தார். அதனால் அவரே ராமனின் மனதிற்கு உகந்த தூதன்.

அஞ்சனையின் புத்திரனாக அவதரித்தார். அதனால் ஆஞ்சநேயன் என்று பெயர் பெற்றார். அவர் நம் மன சஞ்சலங்கள் அனைத்தையும் நீக்குவார். அவர் அழகன். அவருக்கு அவர் பெற்றோர் முதலில் வைத்த பெயர் சுந்தரன். அதனாலோ என்னவோ அனுமன் சீதையைக் காண இலங்கைக்குச் சென்றதிலிருந்து, தேவியின் சூடாமணியை ராமனிடம் ஒப்படைக்கும் வரையில் உள்ள பகுதி, ஸ்ரீ மத் ராமாயணத்தில், சுந்தர காண்டம் என்று அழைக்கப்படுகிறது.

ஒரு நொடியில் மஹா சமுத்ரத்தை தாண்டி, இலங்கைக்குச் சென்றார். சீதா தேவியைப் பார்த்து, அவர் சோகத்தை நாசம் செய்து, அவர் கண்ணீர் துடைத்தார்.
கருணைக்கடல் அவர். அவரை வணங்கும் அடியவர்களுக்கு வாழ்வில் வளம், நலம் யாவற்றையும் வாரி வாரி வழங்கும் வள்ளலாவார்.

நடராஜர்

ஆடல் அரசின் ஆனந்த நடனம்
ஆசை தீர கண்டு களித்தோமே

நாடும் அன்பருக்கு நாளும் நல்லருள் புரியும்
நடன சபாபதி நான் மறை துதி பதி

பாடி பணியும் அன்பர் பாவங்களை களைந்து
வீடு பேறும் தந்து ஆட்கொள்ளும் தெய்வமே
தேடி கிடைக்காத தெள்ளமுதே - மால் அயன்
தேடி கிடைக்காத தெள்ளமுதே - உன்னை
அடையும் வழி ஒன்று அதுவே சிவ நாம ஸ்மரணம்

இதனை பைரவி ராகத்தில் மிஸ்ர சாபு தாளத்தில் அமைத்துள்ளேன் 

காஞ்சி காமாக்ஷி

கருணை  பொழியும் கவின்மிகு கண்கள்
குறுநகை தவழும் இளஞ்செவ் விதழ்கள்
கரும்பும் வில்லும் பாசாங் குசமும்
ஒருங்கே தரிக்கும் அருட்திரு கரங்கள்
வருகின்ற பக்தர்கள் மகிழ்வுறும் வண்ணம்
அருட்தவ கோலத்தில் அழகாய் அமர்ந்து
திருவருள் புரியும் ஏகாம்பர நாயகி
உனைத் தொழுவார்க்கு ஒருதீங் கில்லையே