Thursday, 7 April 2016

பஞ்ச பூத ஸ்தல கீர்த்தனைகள் - நீர் - திருவானைக்கா

ராகம் - வராளி 
தாளம் - மிஸ்ர சாபு 

பல்லவி 
ஜம்புநாதனை துதிப்பாய் ஓ மனமே நீ 

அனுபல்லவி 
அம்புஜ வதனி அகிலாண்டநாயகி 
அப்பு லிங்க வடிவாய்ப் பூஜித்த உத்தம  (ஜம்புநாதனை)

சரணம் 
சார முனி சிரத்தில் முளைத்த வெண் நாவல் மரம் கீழ் 
ஆற அமர்ந்து அன்னைக்கு ஞானம் தந்து 
வாரணமும் சிலந்தியும் செய்த பூஜையால் மகிழ்ந்து 
பூரண முக்தி தந்து தன்னுள்ளே ஆட்கொண்ட  (ஜம்புநாதனை)

பொருள்:
திருவானைக்கா என்னும் க்ஷேத்ரத்தில் அருள்புரியும் ஜம்புநாதனை துதிக்க வேண்டும் மனமே.

தாமரை மலர் போன்ற அழகிய முகம் கொண்ட அகிலாண்டேஸ்வரி, காவிரி நதிக்கு அருகில், புனித நீரினால் லிங்க ஸ்வரூபத்தை அமைத்து, வழிபட்ட உத்தமமானவர் அவர்.

சார முனிவர், அபூர்வமான வெள்ளை நிற நாவல் பழத்தை, கயிலையில் இறைவனுக்கு தந்தார். அதனை உண்ட இறைவன், மகிழ்ந்து, அதன் விதையினை உமிழ்ந்தார். விதையினை முனிவர் உண்டார். அவர் சிரத்திலிருந்து வெண்ணாவல் மரம் ஒன்று முளைத்தது. காவிரிக்கு அருகில், உயர் வகை யானைகள் நிறைந்து காணப்பட்ட  கஜாரண்யம் என்னும் க்ஷேத்ரத்தில், அமர்ந்து தவம் மேற்கொண்டார் முனிவர். அந்த நிழலின் கீழே தான், அம்பாள் அப்பு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டாள். அவளுக்கு அங்கே இறைவன் காட்சி தந்து, சிவ ஞானத்தை அருளினார். நாவல் மரம் கீழ் அமர்ந்ததால் ஜம்புநாதன் என்று இறைவன் அழைக்கப்பட்டார். ஜம்பு - நாவல் பழம்.

திருவானைக்காவில் இறைவி இறைவனை நோக்கித் தவம் இருந்து வருகிறாள். திருமண வைபவம் இன்னும் நடைபெறவில்லை. குரு - சிஷ்யை என்ற உறவிலேயே இருவரும் இருந்து வருகின்றனர். இன்றும் உச்சிக்காலத்தில், அர்ச்சகர், புடவை அணிந்து, ஜம்புகேசனுக்கு பூஜை செய்து வருகிறார். அம்பாள் ஸ்வரூபமாக அர்ச்சகர் பூஜிப்பதாக வழக்கம் இருந்து வருகிறது. திருமண உத்சவம் இல்லாததால், கோவிலில் தாளத்தோடு மேளம் கொட்டப்படுவது இல்லை. ஒற்றைக்கொட்டு தான்.

வாரணம் - யானை. யானையும் சிலந்தியும் மாறி மாறி பூஜை செய்து வந்தன. அவற்றால் மகிழ்ச்சியுற்று இறைவன் இருவருக்கும் முக்தி அளித்தார்.

வெண்ணாவல் மரம் கீழ் உள்ள, அப்பு லிங்கத்திற்கு, சிலந்தி ஒன்று தினமும் வலைப்பிண்ணி மேலே தூசுகள் விழாமல் காக்கும். பின்னர் யானை ஒன்று, காவிரியிலிருந்து நீர் எடுத்து வந்து லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வணங்கும். இதனால் சிலந்தி வலை களைந்து விடும். கோபமுற்ற சிலந்தி, யானை இவ்வாறு செய்வதைக்கண்டு, அதன் துதிக்கையுள் சென்றது. யானைக்கு மூச்சுத் திணறியது. துதிக்கையை வேகமாக தரையில் அறைந்தது. அதனால் சிலந்தி மடிந்தது. யானையும் மூச்சுத் திணறி இறந்தது.

அடுத்தப் பிறவியில் யானை சேரமன்னனாகவும், சிலந்தி சோழன்
கோச்செங்கண்ணனாகவும் பிறந்தார்கள். பூர்வ ஜன்ம வாசனையால் சோழன் பல சிவாலயங்கள் காவிரியின் கரையில் எழுப்பினான். ஆனால் லிங்கத்தை, யானை நுழைய முடியாத அளவிற்கு கீழே வைத்தான். இன்றும் நவ துவாரங்கள் வழியாக, குனிந்துதான் ஜம்புகேஸ்வரரைக் காண முடியும். இந்த மன்னர்கள் இருவரும் பின்னர் முக்தி அடைந்தனர் என்பது புராணம்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

1 comment:

  1. மிக அருமை.வராளி கருத்தி.ஸ்தல வரலாறு அதன் சிறப்பு அதை பூஜிப்பதால் அருளப்படும் பலன் இவையனைத்தும் ஐந்து நிமிடத்தில் மிக இன்பமான கானாஅமிர்தமாய்.இதைக்கேட்க அகிலாண்டேஸ்வரியே ஜம்பு நாதருடன் திருத்தேரில் வந்து செவிமடுத்தாள். ஆனந்த வாழ்க்கை உனக்கு கிட்டட்டும் என்றென்றும்.செவிமடுத்த நாமும் ஈடு இணையில்லா பேரின்பம் எய்தினோம்.இதை செவிமடுக்கும் அனைவரும் குறைவில்லா நிறை வாழ்க்கை அருளப்பெருவாராக.

    ReplyDelete