Monday, 10 April 2017

சிவன் - கற்பகநாதன் (கபாலீஸ்வரர்)

ராகம் - ஆபோகி 
தாளம் - ஆதி 

பல்லவி 
கற்பக நாதன் கண்பார்த் தருள்வார்
கற்பித மாயச் சூழினை அறுப்பார்

அனுபல்லவி
பொற்பதம் காட்டியே பொற்சபை யதனில்
அற்புத ஆனந்த நடனம் ஆடிடும் (கற்பக)

சரணம்
சிற்பர குருவாய் சனகாதி முனிவர்க்கு
முற்றது உணரும் ஞானநிலைத் தந்தார்
பற்றது நீங்கவே பாடிநிதம் துதிப்போம்
வெற்றி விடைமேல் வலம்வரும் கபாலி
(கற்பக)

*முற்றது - முதலும் முடிவுமான சத்தியம்.

பாடலைக் கேட்க:

Check this out on Chirbit

Friday, 24 March 2017

சிவன் - ஸாமகானப் பிரியன்

ராகம்: ஸாமா
தாளம்: ஆதி

பல்லவி:
ஸாமகானப் பிரியன் சங்கரன் மலர்ப்பதம் 
சந்ததம் பணிவோம் சத்கதி அடைவோம்

அனுபல்லவி:
சேமமுறவே சிவகதி பெறவே
நாமம் அதனை நாளும் துதிப்போம் (சிவ)

சரணம்:
மாலயன் தேவர்கள் காணா மலர்ப்பதம்
மாணிக்க வாசகர் கண்ட குரு பதம்
ஆலகாலம் உண்ட நீலகண்டன் பதம்
ஆனந்த தாண்டவம் ஆடிய பொற்பதம் (ஸாம)

பாடலைக் கேட்க:

Check this out on Chirbit

Monday, 11 April 2016

பஞ்ச பூத ஸ்தல கீர்த்தனைகள் - நிலம் - காஞ்சிபுரம் (கச்சி ஏகம்பம்)

ராகம்: ஸ்ரீ
தாளம்: கண்ட சாபு

பல்லவி
கச்சி மாநகர் தன்னில்
காட்சி தந்தருள் செய்யும்
ஏகாம்ப்ர நாதன் பதம்
பணிந்து நலம் பெறுவோம்

அனுபல்லவி
அச்சுத சோதரி ஸ்ரீ காமாக்ஷி
அர்ச்சித்து வணங்கிய பூமி தத்துவமான (கச்சி)

சரணம்
ஒற்றை மா மர நிழலில்
ஒன்றிய மனதுடன்
நற்றவம் ஏற்றதோர்
நங்கையாம் அவளின் மேல்
பற்றிய மழுவுடன்
வற்றாத கங்கையும்
எய்தினார் பின் அவள்
அணைக்கவே அருளிய (கச்சி)

பொருள்:
கச்சி (காஞ்சி) என்னும் பெருநகரில் காட்சிக்கொடுத்து ஆட்சி புரியும், ஏகாம்பர நாதனின் பதம் பணிந்து நலம் பெறுவோமாக.

நகரேஷு காஞ்சி என்று காளிதாசனால் புகழப்பட்ட பெருநகரம் காஞ்சிபுரம்.

அச்சுதனின் சஹோதரி ஸ்ரீ காமாக்ஷி, மண்ணினால் லிங்க வடிவத்தை அமைத்து, சிவபெருமானை வழிபட்டாள். அதனாலேயே இந்த ஸ்தலம், பஞ்ச பூதங்களுள், ப்ரிதிவி (நிலம்) ஸ்தலமாக கருதப்படுகிறது.

ஒரு மா மரத்திற்கு அடியில், அம்பாள் தவம் மேற்கொண்டாள். அவளை சோதனை செய்வதற்காக இறைவன், தன் கையில் உள்ள நெருப்பினை விட்டார். அம்பாள் தன் சஹோதரன் வரதனை உதவிக்கு அழைத்தாள். வரதனின் சுதர்ஷன சக்ரம் அம்பாளுக்கு உதவி புரிந்து, அவள் தவத்தை மேலும் தொடர வழி வகுத்தது.

பின்னர், இறைவன், தன் தலையில் பாயும் கங்கையை ஏவினர். மண்ணினால் செய்த லிங்கமாயிற்றே என்று அம்பாள், லிங்கத்தினை, வெள்ளம் அடிதுச்செல்லாமல் இருக்க, தன் இரு கைகளாலும் அணைத்துக்கொண்டாள். இறைவன், அன்னையின் தவத்தை மெச்சி. காட்சிக்கொடுத்தார்.

ஏகாம்ப்ரநாதர் - ஏக + ஆம்ப்ர + நாதர்.
ஏக - ஒன்று
ஆம்ப்ர - மாம்பழம்

ஒரு மாமரத்திற்கு கீழ் அன்னைக்கு காட்சி கொடுத்ததால், இறைவன் ஏகாம்பரநாதன் என்று அழைக்கப்படுகிறார். இங்கே அந்த ஒற்றை மாமரத்தில் நான்கு வகையான மாங்கனிகள் காய்க்கும் என கூறுவார். வேதமே மாமர உருவில் உள்ளது. 4 வகை மாங்கனிகளாய், 4 வேதங்களும் விளங்குகின்றன என்று ஐதீகம்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Thursday, 7 April 2016

பஞ்ச பூத ஸ்தல கீர்த்தனைகள் - நீர் - திருவானைக்கா

ராகம் - வராளி 
தாளம் - மிஸ்ர சாபு 

பல்லவி 
ஜம்புநாதனை துதிப்பாய் ஓ மனமே நீ 

அனுபல்லவி 
அம்புஜ வதனி அகிலாண்டநாயகி 
அப்பு லிங்க வடிவாய்ப் பூஜித்த உத்தம  (ஜம்புநாதனை)

சரணம் 
சார முனி சிரத்தில் முளைத்த வெண் நாவல் மரம் கீழ் 
ஆற அமர்ந்து அன்னைக்கு ஞானம் தந்து 
வாரணமும் சிலந்தியும் செய்த பூஜையால் மகிழ்ந்து 
பூரண முக்தி தந்து தன்னுள்ளே ஆட்கொண்ட  (ஜம்புநாதனை)

பொருள்:
திருவானைக்கா என்னும் க்ஷேத்ரத்தில் அருள்புரியும் ஜம்புநாதனை துதிக்க வேண்டும் மனமே.

தாமரை மலர் போன்ற அழகிய முகம் கொண்ட அகிலாண்டேஸ்வரி, காவிரி நதிக்கு அருகில், புனித நீரினால் லிங்க ஸ்வரூபத்தை அமைத்து, வழிபட்ட உத்தமமானவர் அவர்.

சார முனிவர், அபூர்வமான வெள்ளை நிற நாவல் பழத்தை, கயிலையில் இறைவனுக்கு தந்தார். அதனை உண்ட இறைவன், மகிழ்ந்து, அதன் விதையினை உமிழ்ந்தார். விதையினை முனிவர் உண்டார். அவர் சிரத்திலிருந்து வெண்ணாவல் மரம் ஒன்று முளைத்தது. காவிரிக்கு அருகில், உயர் வகை யானைகள் நிறைந்து காணப்பட்ட  கஜாரண்யம் என்னும் க்ஷேத்ரத்தில், அமர்ந்து தவம் மேற்கொண்டார் முனிவர். அந்த நிழலின் கீழே தான், அம்பாள் அப்பு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டாள். அவளுக்கு அங்கே இறைவன் காட்சி தந்து, சிவ ஞானத்தை அருளினார். நாவல் மரம் கீழ் அமர்ந்ததால் ஜம்புநாதன் என்று இறைவன் அழைக்கப்பட்டார். ஜம்பு - நாவல் பழம்.

திருவானைக்காவில் இறைவி இறைவனை நோக்கித் தவம் இருந்து வருகிறாள். திருமண வைபவம் இன்னும் நடைபெறவில்லை. குரு - சிஷ்யை என்ற உறவிலேயே இருவரும் இருந்து வருகின்றனர். இன்றும் உச்சிக்காலத்தில், அர்ச்சகர், புடவை அணிந்து, ஜம்புகேசனுக்கு பூஜை செய்து வருகிறார். அம்பாள் ஸ்வரூபமாக அர்ச்சகர் பூஜிப்பதாக வழக்கம் இருந்து வருகிறது. திருமண உத்சவம் இல்லாததால், கோவிலில் தாளத்தோடு மேளம் கொட்டப்படுவது இல்லை. ஒற்றைக்கொட்டு தான்.

வாரணம் - யானை. யானையும் சிலந்தியும் மாறி மாறி பூஜை செய்து வந்தன. அவற்றால் மகிழ்ச்சியுற்று இறைவன் இருவருக்கும் முக்தி அளித்தார்.

வெண்ணாவல் மரம் கீழ் உள்ள, அப்பு லிங்கத்திற்கு, சிலந்தி ஒன்று தினமும் வலைப்பிண்ணி மேலே தூசுகள் விழாமல் காக்கும். பின்னர் யானை ஒன்று, காவிரியிலிருந்து நீர் எடுத்து வந்து லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வணங்கும். இதனால் சிலந்தி வலை களைந்து விடும். கோபமுற்ற சிலந்தி, யானை இவ்வாறு செய்வதைக்கண்டு, அதன் துதிக்கையுள் சென்றது. யானைக்கு மூச்சுத் திணறியது. துதிக்கையை வேகமாக தரையில் அறைந்தது. அதனால் சிலந்தி மடிந்தது. யானையும் மூச்சுத் திணறி இறந்தது.

அடுத்தப் பிறவியில் யானை சேரமன்னனாகவும், சிலந்தி சோழன்
கோச்செங்கண்ணனாகவும் பிறந்தார்கள். பூர்வ ஜன்ம வாசனையால் சோழன் பல சிவாலயங்கள் காவிரியின் கரையில் எழுப்பினான். ஆனால் லிங்கத்தை, யானை நுழைய முடியாத அளவிற்கு கீழே வைத்தான். இன்றும் நவ துவாரங்கள் வழியாக, குனிந்துதான் ஜம்புகேஸ்வரரைக் காண முடியும். இந்த மன்னர்கள் இருவரும் பின்னர் முக்தி அடைந்தனர் என்பது புராணம்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Wednesday, 30 March 2016

பஞ்ச பூத ஸ்தல கீர்த்தனைகள் - நெருப்பு - திருவண்ணாமலை

ராகம்: ஆரபி
தாளம்: ஆதி

பல்லவி
அண்ணாமலையானை அனுதினம் எண்ணவே
இன்பமயமான முக்தி பெறுவோம்

அனுபல்லவி
உண்ணாமுலைக்கு ஒருபாதி தந்தவர்
உலகோர் காண ஜோதியாய் நின்ற

சரணம்
கண்ணுதற் கடவுளாம் கங்கையணி சடையோன்
மின்னும் மழுவுடன் மானையும் ஏந்தியே
வெண்ணீறணிந்து வேங்கை உரி தரித்து
விண்ணவர் போற்றவே விடைமேல் வலம்வரும்

பொருள்:
அக்னி ஸ்தலமான அண்ணாமலையில் அமர்ந்து அருளும் அருணாச்சலேஸ்வரர் என்னும் அண்ணாமலையானை தினமும் எண்ணி வந்தால் இன்பமே நிலைத்திருக்கும் முக்தியை நாம் பெறுவோம். நினைத்தாலே முக்தி தரக்கூடிய ஸ்தலம் அண்ணாமலை.

ஸ்மாரனார் கைவல்ய ப்ரத சரணாரவிந்தம் என்று ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் தனது பஞ்ச பூத ஸ்தல கீர்த்தனங்களில், அருணாச்சல நாதம் ஸ்மராமி என்ற சாரங்கா ராக பாடலில் பாடியுள்ளார்.

உண்ணாமுலை அம்மை, ஸ்தலத்தின் நாயகி. அவளுக்கு தன் உடலில் ஒரு பாதியை (இட பாகத்தை) ஈசன் கொடுத்தார் என்பது அனைவரும் அறிந்ததே. திருக்கார்த்திகை தீபத்தின் போது, அர்தநாரீஸ்வரராக இறைவன் அண்ணாமலையில் வலம் வருவது, ஆண்டுதோறும் நாம் பார்த்து ரசிக்கும் ஒரு அனுபவம். அம்மைக்கு ஒரு பாதி கொடுத்த இறைவன், உலகோர் காண (பிரம்மா, விஷ்ணு உள்பட) நீண்டு வளர்ந்துக்கொண்டே இருக்கும் ஜோதிப்பிழம்பாக காட்சி அளித்தார். லிங்கோத்பவராக இருக்கிறார்.

இதனை,

வேழ வெண்கொம்பு ஒசித்த மாலும், விளங்கிய நான்முகனும் 
சூழ எங்கும் நேட ஆங்கோர் சோதி உள்ளாகி நின்றாய்

என்று சம்பந்த பெருமான், தனது திருநெடுங்களம் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

கண்ணுதற் - கண் + நுதல் = நுதல் - நெற்றி. நெற்றிக்கண் உள்ள கடவுள், கங்கையினை தன் தலையில் அணிந்துள்ளார். மிளிரும் நெருப்பினையும், மான் ஒன்றினையும் தன் இருக்கரங்களில் தாங்கியுள்ளார். நெருப்பும், மானும், தாருகாவன முனிவர்கள் எய்தியவை. அவர்களின் கர்வத்தை அடக்க, அவற்றை தன் கரங்களில் ஏந்தினார் பெருமான்.

உடல் முழுதும் திருநீறு அணிந்து, வேங்கை (புலி) உரி (தோல்) அணிந்துள்ளார். தேவர்கள் போற்ற, வெள்ளை ரிஷபத்தின் (விடை) மேல் உலா வருவார்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Tuesday, 29 March 2016

பஞ்ச பூத ஸ்தல கீர்த்தனைகள் - காற்று - காலஹஸ்தி

ராகம்: கௌளை 
தாளம்: மிஸ்ர சாபு

பல்லவி:
சீகாளத்தீசரைப் பணிவோம்
சின்மய வடிவானவர்
சிந்தைக் கவலை தீர்ப்பவர்

அனுபல்லவி;
நாகம் அணிந்த நீலகண்டன்
யோகம் அருளும் மோன குருபரன்
வாகீசற்குக் கயிலை காட்டிய  ஞானாம்பிகை மணாளன்
(சீகாளத்தீசரை)

சரணம்:
கண்ணப்பரை ஆட்கொண்டவர்
காற்றின் வடிவாய் ஆட்சி புரிபவர்
எண்ணம் யாவையும் நிறைவேற்றுவார்
எண் மா சித்திகளைக் கொடுத்தருளுவார்
(சீகாளத்தீசரை)

பொருள்:
சீ+காள+அத்தி+ஈசன் = சிலந்தி, நாகம், யானை ஆகிய இம்மூன்றும் வணங்கும் ஈசன். அவர்
1. சின்மய வடிவானவர் - தூய அறிவின் வடிவானவர்
2. சிந்தை கவலை தீர்ப்பவர் - மனதில் உள்ள கவலைகளை தீர்ப்பவர்

பாம்பை தன் நீல நிற கழுத்தில் அணிந்தவர். மௌன குருவாக அமர்ந்து யோகத்தை அருள்பவர்.
வாகீசற்கு  (திருநாவுக்கரசருக்கு) கயிலாயத்தை காளஹஸ்தியில் பெருமான் காட்டினார். அவரே ஞானாம்பிகையின் தலைவன்.

கண்ணப்ப நாயனாரை இத்தலத்தில் ஆட்கொண்டார் இறைவன். ஐம்பூதங்களுள் காற்றாக காளஹஸ்தியில் உள்ளார். இவரை வணங்கினால் நம் எண்ணங்கள் யாவும் நிறைவேறும். அனிமா, மஹிமா, லஹிமா, கரிமா முதலிய எட்டு சித்திகளையும் நமக்கு அருள்வார்.

பாடல் கேட்க:


Check this out on Chirbit

Tuesday, 22 March 2016

பஞ்சபூத ஸ்தல கீர்த்தனைகள் - ஆகாசம் - தில்லை (சிதம்பரம்)

ராகம்: நாட்டை 
தாளம்: சதுஸ்ர ஜாதி ஏக தாளம் (திஸ்ர நடை)

பல்லவி:
தில்லை அம்பல வாணனே
சிவகாமி நாதனே சித்சபை வாசனே

அனுபல்லவி:
எல்லை இல்லாப் பெரியோனே 
நல்லோனே நான்மறை நாதனே (தில்லை)

சரணங்கள்:
வல்வினைகள் யாவுமே வல்லவா நின் நாமத்தைச்  
சொல்லிய மறுகணம் நில்லாது மறையுமே 
நல்லிசைப் பாக்களால் நாளும் நின்னைப் போற்றவே 
நல்லருள் புரிந்திடும் நாட்டையும் காத்திடும் (தில்லை)

பதஞ்சலி வ்யாக்ரபாதர் இரு முனிகளும் காணவே
சதங்கை கட்டி ஆடியே பிரபஞ்சத்தை நடத்திடும்
அதிர முழங்கும் உடுக்கையிருந்து அனைத்துமே தோன்றிட 
மதுரமான நகையுடன் தஹராகாசத்துள் உறையும் (தில்லை)

பொருள்:
தில்லை என்னும் க்ஷேத்ரத்தில் உள்ள சபையில் (அம்பலம்) உறைபவனே, சிவகாமியின் நாதனே, சித்சபையில் வசிப்பவனே. சித் - தூய அறிவு. தூய அறிவாக இறைவன் இருக்கிறார்.

முதலும் முடிவும் இல்லாத பெரியவனே. எல்லை இல்லாத ஆகாசம் போன்ற பெரியவன். நல்லோனே - நன்மைகளின் உறைவிடமே, நான்கு மறைகளாலும் பாடப்படும் நாயகனே.

கொடிய வல்வினைகள் அனைத்தும் வல்லவனான இறைவனின் நாமத்தை கேட்டால், அடுத்த நொடியிலேயே, அவ்விடத்தில் நிற்காது ஓடிவிடும்.

நல்ல இசையோடு கூடிய பாடல்களால் அனுதினமும் இறைவனை துதிப்பதால், நமக்கு இறைவன் நல்லருள் புரிவார். நாம் வாழும் நாட்டினையும் காப்பார். நாட்டை என்ற ராகத்தின் முத்திரை இங்கு பொருந்தியுள்ளது.

பதஞ்சலி, வ்யாக்ரபாதர் என்னும் இரு முனிவர்களும் காண, காலில் சதங்கைக்கட்டி ஆடி, பிரபஞ்சத்தில் அனைத்தும் உருவாகி, நடைபெற வழிவகுக்கிறார் நம் நடராஜன். இறைவனின் திருக்கரங்களில் உள்ள உடுக்கையின் சப்தத்திலிருந்து வேதம், உபநிஷத், வ்யாகர்ணம் முதலான வேத அங்கங்கள் போன்ற பல தோன்றின. பல செயல்கள் புரிந்தாலும், முகத்தில் இனிய 
புன்னகை ததும்ப தஹராகாசம் என்னும் இடத்தில் உறைகிறார். 

சிதம்பர ரஹஸ்யம் என்பது தஹராகாச வித்யை என்று சாந்தோக்ய உபநிஷத் மற்றும் ப்ரஹதாரண்யக உபநிஷத் இவ்விரண்டிலும் கூறப்பட்டுள்ளது. புக்தி முக்தி ப்ரத தஹராகாசம் என்று ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் தான் இயற்றிய ஆனந்த நடன பிரகாசம் என்ற கேதார ராக க்ருதியில் பாடியுள்ளார்.

5 தன்மாத்ரங்கள் (சப்த, ஸ்பர்ஷ, ரூப, ரஸ, கந்தம்) - பஞ்ச தன்மாத்ர ஸாயகா என்று அம்பாளுக்கு 1000 நாமங்களில் ஒரு நாமம். அதில் சப்தம் என்னும் ஒலி - ஆகாசத்தை குறிக்கும். ஆகசத்திற்கு ஒலி என்ற ஒரே ஒரு தன்மை மட்டுமே இருக்கிறது.

பாடல் கேட்க:

Check this out on Chirbit