Monday, 11 April 2016

பஞ்ச பூத ஸ்தல கீர்த்தனைகள் - நிலம் - காஞ்சிபுரம் (கச்சி ஏகம்பம்)

ராகம்: ஸ்ரீ
தாளம்: கண்ட சாபு

பல்லவி
கச்சி மாநகர் தன்னில்
காட்சி தந்தருள் செய்யும்
ஏகாம்ப்ர நாதன் பதம்
பணிந்து நலம் பெறுவோம்

அனுபல்லவி
அச்சுத சோதரி ஸ்ரீ காமாக்ஷி
அர்ச்சித்து வணங்கிய பூமி தத்துவமான (கச்சி)

சரணம்
ஒற்றை மா மர நிழலில்
ஒன்றிய மனதுடன்
நற்றவம் ஏற்றதோர்
நங்கையாம் அவளின் மேல்
பற்றிய மழுவுடன்
வற்றாத கங்கையும்
எய்தினார் பின் அவள்
அணைக்கவே அருளிய (கச்சி)

பொருள்:
கச்சி (காஞ்சி) என்னும் பெருநகரில் காட்சிக்கொடுத்து ஆட்சி புரியும், ஏகாம்பர நாதனின் பதம் பணிந்து நலம் பெறுவோமாக.

நகரேஷு காஞ்சி என்று காளிதாசனால் புகழப்பட்ட பெருநகரம் காஞ்சிபுரம்.

அச்சுதனின் சஹோதரி ஸ்ரீ காமாக்ஷி, மண்ணினால் லிங்க வடிவத்தை அமைத்து, சிவபெருமானை வழிபட்டாள். அதனாலேயே இந்த ஸ்தலம், பஞ்ச பூதங்களுள், ப்ரிதிவி (நிலம்) ஸ்தலமாக கருதப்படுகிறது.

ஒரு மா மரத்திற்கு அடியில், அம்பாள் தவம் மேற்கொண்டாள். அவளை சோதனை செய்வதற்காக இறைவன், தன் கையில் உள்ள நெருப்பினை விட்டார். அம்பாள் தன் சஹோதரன் வரதனை உதவிக்கு அழைத்தாள். வரதனின் சுதர்ஷன சக்ரம் அம்பாளுக்கு உதவி புரிந்து, அவள் தவத்தை மேலும் தொடர வழி வகுத்தது.

பின்னர், இறைவன், தன் தலையில் பாயும் கங்கையை ஏவினர். மண்ணினால் செய்த லிங்கமாயிற்றே என்று அம்பாள், லிங்கத்தினை, வெள்ளம் அடிதுச்செல்லாமல் இருக்க, தன் இரு கைகளாலும் அணைத்துக்கொண்டாள். இறைவன், அன்னையின் தவத்தை மெச்சி. காட்சிக்கொடுத்தார்.

ஏகாம்ப்ரநாதர் - ஏக + ஆம்ப்ர + நாதர்.
ஏக - ஒன்று
ஆம்ப்ர - மாம்பழம்

ஒரு மாமரத்திற்கு கீழ் அன்னைக்கு காட்சி கொடுத்ததால், இறைவன் ஏகாம்பரநாதன் என்று அழைக்கப்படுகிறார். இங்கே அந்த ஒற்றை மாமரத்தில் நான்கு வகையான மாங்கனிகள் காய்க்கும் என கூறுவார். வேதமே மாமர உருவில் உள்ளது. 4 வகை மாங்கனிகளாய், 4 வேதங்களும் விளங்குகின்றன என்று ஐதீகம்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Thursday, 7 April 2016

பஞ்ச பூத ஸ்தல கீர்த்தனைகள் - நீர் - திருவானைக்கா

ராகம் - வராளி 
தாளம் - மிஸ்ர சாபு 

பல்லவி 
ஜம்புநாதனை துதிப்பாய் ஓ மனமே நீ 

அனுபல்லவி 
அம்புஜ வதனி அகிலாண்டநாயகி 
அப்பு லிங்க வடிவாய்ப் பூஜித்த உத்தம  (ஜம்புநாதனை)

சரணம் 
சார முனி சிரத்தில் முளைத்த வெண் நாவல் மரம் கீழ் 
ஆற அமர்ந்து அன்னைக்கு ஞானம் தந்து 
வாரணமும் சிலந்தியும் செய்த பூஜையால் மகிழ்ந்து 
பூரண முக்தி தந்து தன்னுள்ளே ஆட்கொண்ட  (ஜம்புநாதனை)

பொருள்:
திருவானைக்கா என்னும் க்ஷேத்ரத்தில் அருள்புரியும் ஜம்புநாதனை துதிக்க வேண்டும் மனமே.

தாமரை மலர் போன்ற அழகிய முகம் கொண்ட அகிலாண்டேஸ்வரி, காவிரி நதிக்கு அருகில், புனித நீரினால் லிங்க ஸ்வரூபத்தை அமைத்து, வழிபட்ட உத்தமமானவர் அவர்.

சார முனிவர், அபூர்வமான வெள்ளை நிற நாவல் பழத்தை, கயிலையில் இறைவனுக்கு தந்தார். அதனை உண்ட இறைவன், மகிழ்ந்து, அதன் விதையினை உமிழ்ந்தார். விதையினை முனிவர் உண்டார். அவர் சிரத்திலிருந்து வெண்ணாவல் மரம் ஒன்று முளைத்தது. காவிரிக்கு அருகில், உயர் வகை யானைகள் நிறைந்து காணப்பட்ட  கஜாரண்யம் என்னும் க்ஷேத்ரத்தில், அமர்ந்து தவம் மேற்கொண்டார் முனிவர். அந்த நிழலின் கீழே தான், அம்பாள் அப்பு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டாள். அவளுக்கு அங்கே இறைவன் காட்சி தந்து, சிவ ஞானத்தை அருளினார். நாவல் மரம் கீழ் அமர்ந்ததால் ஜம்புநாதன் என்று இறைவன் அழைக்கப்பட்டார். ஜம்பு - நாவல் பழம்.

திருவானைக்காவில் இறைவி இறைவனை நோக்கித் தவம் இருந்து வருகிறாள். திருமண வைபவம் இன்னும் நடைபெறவில்லை. குரு - சிஷ்யை என்ற உறவிலேயே இருவரும் இருந்து வருகின்றனர். இன்றும் உச்சிக்காலத்தில், அர்ச்சகர், புடவை அணிந்து, ஜம்புகேசனுக்கு பூஜை செய்து வருகிறார். அம்பாள் ஸ்வரூபமாக அர்ச்சகர் பூஜிப்பதாக வழக்கம் இருந்து வருகிறது. திருமண உத்சவம் இல்லாததால், கோவிலில் தாளத்தோடு மேளம் கொட்டப்படுவது இல்லை. ஒற்றைக்கொட்டு தான்.

வாரணம் - யானை. யானையும் சிலந்தியும் மாறி மாறி பூஜை செய்து வந்தன. அவற்றால் மகிழ்ச்சியுற்று இறைவன் இருவருக்கும் முக்தி அளித்தார்.

வெண்ணாவல் மரம் கீழ் உள்ள, அப்பு லிங்கத்திற்கு, சிலந்தி ஒன்று தினமும் வலைப்பிண்ணி மேலே தூசுகள் விழாமல் காக்கும். பின்னர் யானை ஒன்று, காவிரியிலிருந்து நீர் எடுத்து வந்து லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வணங்கும். இதனால் சிலந்தி வலை களைந்து விடும். கோபமுற்ற சிலந்தி, யானை இவ்வாறு செய்வதைக்கண்டு, அதன் துதிக்கையுள் சென்றது. யானைக்கு மூச்சுத் திணறியது. துதிக்கையை வேகமாக தரையில் அறைந்தது. அதனால் சிலந்தி மடிந்தது. யானையும் மூச்சுத் திணறி இறந்தது.

அடுத்தப் பிறவியில் யானை சேரமன்னனாகவும், சிலந்தி சோழன்
கோச்செங்கண்ணனாகவும் பிறந்தார்கள். பூர்வ ஜன்ம வாசனையால் சோழன் பல சிவாலயங்கள் காவிரியின் கரையில் எழுப்பினான். ஆனால் லிங்கத்தை, யானை நுழைய முடியாத அளவிற்கு கீழே வைத்தான். இன்றும் நவ துவாரங்கள் வழியாக, குனிந்துதான் ஜம்புகேஸ்வரரைக் காண முடியும். இந்த மன்னர்கள் இருவரும் பின்னர் முக்தி அடைந்தனர் என்பது புராணம்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Wednesday, 30 March 2016

பஞ்ச பூத ஸ்தல கீர்த்தனைகள் - நெருப்பு - திருவண்ணாமலை

ராகம்: ஆரபி
தாளம்: ஆதி

பல்லவி
அண்ணாமலையானை அனுதினம் எண்ணவே
இன்பமயமான முக்தி பெறுவோம்

அனுபல்லவி
உண்ணாமுலைக்கு ஒருபாதி தந்தவர்
உலகோர் காண ஜோதியாய் நின்ற

சரணம்
கண்ணுதற் கடவுளாம் கங்கையணி சடையோன்
மின்னும் மழுவுடன் மானையும் ஏந்தியே
வெண்ணீறணிந்து வேங்கை உரி தரித்து
விண்ணவர் போற்றவே விடைமேல் வலம்வரும்

பொருள்:
அக்னி ஸ்தலமான அண்ணாமலையில் அமர்ந்து அருளும் அருணாச்சலேஸ்வரர் என்னும் அண்ணாமலையானை தினமும் எண்ணி வந்தால் இன்பமே நிலைத்திருக்கும் முக்தியை நாம் பெறுவோம். நினைத்தாலே முக்தி தரக்கூடிய ஸ்தலம் அண்ணாமலை.

ஸ்மாரனார் கைவல்ய ப்ரத சரணாரவிந்தம் என்று ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் தனது பஞ்ச பூத ஸ்தல கீர்த்தனங்களில், அருணாச்சல நாதம் ஸ்மராமி என்ற சாரங்கா ராக பாடலில் பாடியுள்ளார்.

உண்ணாமுலை அம்மை, ஸ்தலத்தின் நாயகி. அவளுக்கு தன் உடலில் ஒரு பாதியை (இட பாகத்தை) ஈசன் கொடுத்தார் என்பது அனைவரும் அறிந்ததே. திருக்கார்த்திகை தீபத்தின் போது, அர்தநாரீஸ்வரராக இறைவன் அண்ணாமலையில் வலம் வருவது, ஆண்டுதோறும் நாம் பார்த்து ரசிக்கும் ஒரு அனுபவம். அம்மைக்கு ஒரு பாதி கொடுத்த இறைவன், உலகோர் காண (பிரம்மா, விஷ்ணு உள்பட) நீண்டு வளர்ந்துக்கொண்டே இருக்கும் ஜோதிப்பிழம்பாக காட்சி அளித்தார். லிங்கோத்பவராக இருக்கிறார்.

இதனை,

வேழ வெண்கொம்பு ஒசித்த மாலும், விளங்கிய நான்முகனும் 
சூழ எங்கும் நேட ஆங்கோர் சோதி உள்ளாகி நின்றாய்

என்று சம்பந்த பெருமான், தனது திருநெடுங்களம் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

கண்ணுதற் - கண் + நுதல் = நுதல் - நெற்றி. நெற்றிக்கண் உள்ள கடவுள், கங்கையினை தன் தலையில் அணிந்துள்ளார். மிளிரும் நெருப்பினையும், மான் ஒன்றினையும் தன் இருக்கரங்களில் தாங்கியுள்ளார். நெருப்பும், மானும், தாருகாவன முனிவர்கள் எய்தியவை. அவர்களின் கர்வத்தை அடக்க, அவற்றை தன் கரங்களில் ஏந்தினார் பெருமான்.

உடல் முழுதும் திருநீறு அணிந்து, வேங்கை (புலி) உரி (தோல்) அணிந்துள்ளார். தேவர்கள் போற்ற, வெள்ளை ரிஷபத்தின் (விடை) மேல் உலா வருவார்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Tuesday, 29 March 2016

பஞ்ச பூத ஸ்தல கீர்த்தனைகள் - காற்று - காலஹஸ்தி

ராகம்: கௌளை 
தாளம்: மிஸ்ர சாபு

பல்லவி:
சீகாளத்தீசரைப் பணிவோம்
சின்மய வடிவானவர்
சிந்தைக் கவலை தீர்ப்பவர்

அனுபல்லவி;
நாகம் அணிந்த நீலகண்டன்
யோகம் அருளும் மோன குருபரன்
வாகீசற்குக் கயிலை காட்டிய  ஞானாம்பிகை மணாளன்
(சீகாளத்தீசரை)

சரணம்:
கண்ணப்பரை ஆட்கொண்டவர்
காற்றின் வடிவாய் ஆட்சி புரிபவர்
எண்ணம் யாவையும் நிறைவேற்றுவார்
எண் மா சித்திகளைக் கொடுத்தருளுவார்
(சீகாளத்தீசரை)

பொருள்:
சீ+காள+அத்தி+ஈசன் = சிலந்தி, நாகம், யானை ஆகிய இம்மூன்றும் வணங்கும் ஈசன். அவர்
1. சின்மய வடிவானவர் - தூய அறிவின் வடிவானவர்
2. சிந்தை கவலை தீர்ப்பவர் - மனதில் உள்ள கவலைகளை தீர்ப்பவர்

பாம்பை தன் நீல நிற கழுத்தில் அணிந்தவர். மௌன குருவாக அமர்ந்து யோகத்தை அருள்பவர்.
வாகீசற்கு  (திருநாவுக்கரசருக்கு) கயிலாயத்தை காளஹஸ்தியில் பெருமான் காட்டினார். அவரே ஞானாம்பிகையின் தலைவன்.

கண்ணப்ப நாயனாரை இத்தலத்தில் ஆட்கொண்டார் இறைவன். ஐம்பூதங்களுள் காற்றாக காளஹஸ்தியில் உள்ளார். இவரை வணங்கினால் நம் எண்ணங்கள் யாவும் நிறைவேறும். அனிமா, மஹிமா, லஹிமா, கரிமா முதலிய எட்டு சித்திகளையும் நமக்கு அருள்வார்.

பாடல் கேட்க:


Check this out on Chirbit

Tuesday, 22 March 2016

பஞ்சபூத ஸ்தல கீர்த்தனைகள் - ஆகாசம் - தில்லை (சிதம்பரம்)

ராகம்: நாட்டை 
தாளம்: சதுஸ்ர ஜாதி ஏக தாளம் (திஸ்ர நடை)

பல்லவி:
தில்லை அம்பல வாணனே
சிவகாமி நாதனே சித்சபை வாசனே

அனுபல்லவி:
எல்லை இல்லாப் பெரியோனே 
நல்லோனே நான்மறை நாதனே (தில்லை)

சரணங்கள்:
வல்வினைகள் யாவுமே வல்லவா நின் நாமத்தைச்  
சொல்லிய மறுகணம் நில்லாது மறையுமே 
நல்லிசைப் பாக்களால் நாளும் நின்னைப் போற்றவே 
நல்லருள் புரிந்திடும் நாட்டையும் காத்திடும் (தில்லை)

பதஞ்சலி வ்யாக்ரபாதர் இரு முனிகளும் காணவே
சதங்கை கட்டி ஆடியே பிரபஞ்சத்தை நடத்திடும்
அதிர முழங்கும் உடுக்கையிருந்து அனைத்துமே தோன்றிட 
மதுரமான நகையுடன் தஹராகாசத்துள் உறையும் (தில்லை)

பொருள்:
தில்லை என்னும் க்ஷேத்ரத்தில் உள்ள சபையில் (அம்பலம்) உறைபவனே, சிவகாமியின் நாதனே, சித்சபையில் வசிப்பவனே. சித் - தூய அறிவு. தூய அறிவாக இறைவன் இருக்கிறார்.

முதலும் முடிவும் இல்லாத பெரியவனே. எல்லை இல்லாத ஆகாசம் போன்ற பெரியவன். நல்லோனே - நன்மைகளின் உறைவிடமே, நான்கு மறைகளாலும் பாடப்படும் நாயகனே.

கொடிய வல்வினைகள் அனைத்தும் வல்லவனான இறைவனின் நாமத்தை கேட்டால், அடுத்த நொடியிலேயே, அவ்விடத்தில் நிற்காது ஓடிவிடும்.

நல்ல இசையோடு கூடிய பாடல்களால் அனுதினமும் இறைவனை துதிப்பதால், நமக்கு இறைவன் நல்லருள் புரிவார். நாம் வாழும் நாட்டினையும் காப்பார். நாட்டை என்ற ராகத்தின் முத்திரை இங்கு பொருந்தியுள்ளது.

பதஞ்சலி, வ்யாக்ரபாதர் என்னும் இரு முனிவர்களும் காண, காலில் சதங்கைக்கட்டி ஆடி, பிரபஞ்சத்தில் அனைத்தும் உருவாகி, நடைபெற வழிவகுக்கிறார் நம் நடராஜன். இறைவனின் திருக்கரங்களில் உள்ள உடுக்கையின் சப்தத்திலிருந்து வேதம், உபநிஷத், வ்யாகர்ணம் முதலான வேத அங்கங்கள் போன்ற பல தோன்றின. பல செயல்கள் புரிந்தாலும், முகத்தில் இனிய 
புன்னகை ததும்ப தஹராகாசம் என்னும் இடத்தில் உறைகிறார். 

சிதம்பர ரஹஸ்யம் என்பது தஹராகாச வித்யை என்று சாந்தோக்ய உபநிஷத் மற்றும் ப்ரஹதாரண்யக உபநிஷத் இவ்விரண்டிலும் கூறப்பட்டுள்ளது. புக்தி முக்தி ப்ரத தஹராகாசம் என்று ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் தான் இயற்றிய ஆனந்த நடன பிரகாசம் என்ற கேதார ராக க்ருதியில் பாடியுள்ளார்.

5 தன்மாத்ரங்கள் (சப்த, ஸ்பர்ஷ, ரூப, ரஸ, கந்தம்) - பஞ்ச தன்மாத்ர ஸாயகா என்று அம்பாளுக்கு 1000 நாமங்களில் ஒரு நாமம். அதில் சப்தம் என்னும் ஒலி - ஆகாசத்தை குறிக்கும். ஆகசத்திற்கு ஒலி என்ற ஒரே ஒரு தன்மை மட்டுமே இருக்கிறது.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Saturday, 12 March 2016

சுகந்த குந்தலாம்பிகா

ராகம்: நாட்டைக்குறிஞ்சி
தாளம்: ஆதி (2 கலை)

பல்லவி:
சுகந்த குந்தலாம்பிகே ஜகதம்பிகே
சுகப்ரதாயிகே ஜனனி மாமவ

அனுபல்லவி:
சகலே சகலலோகநாயிகே
சகலகலாநிபுனே வரதே

சரணம்:
பரிபூர்ண சந்த்ர வதனே
ஹரி சோதரி கிரிராஜ தனயே
த்ரிசிர கிரீஷ நாயிகே லலிதே
சாரமுனி சேவித மாத்ருபூத ஜாயே

பொருள்:
சுகந்தகுந்தலாம்பிகே - வாசம் நிறைந்த கூந்தலை உடைய அம்பிகே.

அம்பாளின் கூந்தலுக்கு இயற்கையாகவே நறுமணம் உண்டு. ஸ்ரீ லலிதா த்ரிசதியில், 30-வது நாமம் - ஏல சுகந்தி சிகுராயை நம: என்று வருகிறது. ஏலக்காய் வாசனை நிறைந்த கூந்தல் உடையவள் என்று பொருள்.

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில், 13 வது நாமம் - சம்பக-அசோக-புன்னாக-சௌகந்திக-லசத்கசாயை நம: என்று வருகிறது. சம்பகம், அசோகம், புன்னாகம், சௌகந்திகம் ஆகிய மலர்களின் வாசத்தை மிஞ்சும் வாசம் நிறைந்த கூந்தல் உடையவள் என்று வர்ணிக்கிறது. இம்மலர்கள், தங்களின் வாசத்தினை பெருக்கிக்கொள்ளவேண்டும் என்பதற்காக அம்பாளின் தலையில் இருக்கவேண்டும் என்று வேண்டியனவாம். அதற்காக அம்பாள் கருணையோடு அவற்றை தன் தலையில் சூடியுள்ளாள்.

சௌந்தர்ய லஹரி - 43 வது ஸ்லோகம்
துனோது த்வாந்தம் ந: துலித-தலித-இந்தீவர-வனம்
ன-ஸ்நிக்த-ச்லக்ஷ்ணம் சிகுர நிகுரும்பம் தவ சிவே
தீயம் ஸௌரப்யம் ஸஹஜம்-உபலப்தும் ஸுமனஸோ
வஸந்த்யஸ்மின் மன்யே வலமதன-வாடீ-விடபினாம்

சொல் - பொருள்:
சிவே - பரமசிவனின் பத்தினியே!
துலித-தலித-இந்தீவர-வனம் - மலர்ந்த கறுநெய்தல் காடு போல் பிரகாசிப்பதும்,
ன-ஸ்நிக்த-ச்லக்ஷ்ணம் - அடர்ந்த-வழவழப்பான-மென்மையான,
தவ சிகுர நிகுரும்பம் - உனது கேச பாரம்,
ந: - எங்களுடைய
த்வாந்தம் - அக இருளை
துனோது - போக்கட்டும்.

தீயம் - அதில் உள்ள
ஸஹஜம்  - இயற்கையான
ஸௌரப்யம் - வாசனையை
உபலப்தும் - அடைய விரும்பி
வலமதன - இந்த்ரனுடைய
வாடீ-விடபினாம் - நந்தவனத்தில் உள்ள மரங்களின்
ஸுமனஸ: - புஷ்பங்கள்
அஸ்மின் - அந்த கேசபாரத்தில்
வஸந்தி - வசிக்கின்றன
மன்யே - என நினைக்கிறேன்

விளக்கம் நன்றி: சௌந்தர்ய லஹரி பாஷ்யம் - ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம் - ஸ்ரீ அண்ணா அவர்கள்.

அபிராமி பட்டர், கனம் தரும் பூங்குழலாள் என்று பாடியுள்ளார்.

இவ்வாறு அன்னையின் கூந்தலுக்கு இயற்கையாகவே மனம் உண்டு என்பதை நக்கீரர் அறிந்திருந்தாலும், மாயையினால் அவர் அதனை மறுத்தார். சிவபெருமானையும் உத்தேசிக்காது மறுத்தார். அதனை துடைதுக்கொள்ளவே, அடுத்த பிறவியில், நக்கீரர், ஸ்ரீ பாஸ்கரராயராக பிறந்து, ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாஷ்யம் செய்தார்.

ஜகதம்பிகே - ஜகத்திற்கு தாயே

சுகப்ரதாயிகே - சுகங்களை அள்ளித் தருபவளே

ஜனனி மாமவ (மாம் அவ) - தாயே, என்னை (மாம்) காப்பாய் (அவ).

சகலே - எல்லாமும் நீயே

சகலலோகநாயிகே - எல்லா உலகினையும் ஆள்பவள் நீயே (பூ, புவ, சுவ, ஜன, தப, மஹ, சத்ய ஆகிய மேல் 7 உலகங்கள் மற்றும் அதல, விதல, சுதல, ரஸாதல, தலாதல, மஹாதல, பாதாள ஆகிய கீழ் 7 உலகங்கள்)

சகல கலா நிபுனே - அனைத்து கலைகளிலும் வல்லவள் அம்பாள்.

வரதே - கலைகளை பக்தர்களுக்கு அளிப்பவள்.

சுகந்த குந்தலாம்பாளை வணங்கினால் ஆயக்கலைகள் 64-ம் நம்மிடம் வந்தடையும். சதுஸ் சஷ்டி கலாமயீ என்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் அம்பாளை அழைக்கிறது.

பரிபூர்ண சந்த்ரவதனே - பௌர்ணமி நிலவினைப் போன்ற அழகிய முகம் உடையவளே. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் சாரு சந்த்ர நிபானனா என்று அழைக்கிறது.

ஹரி சோதரி - ஹரி என்னும் விஷ்ணுவின் சஹோதரியே

கிரிராஜ தனயே - மலையரசனின் புதல்வியே

த்ரிசிரகிரீஷ நாயிகே - திரிசிர மலை நாயகனின் நாயகியே

லலிதே - விளையாட்டாக அனைத்தையும் நடத்துபவளே

சாரமுனி சேவித மாத்ருபூத ஜாயே - சார முனி வணங்கும் மாத்ருபூதேஸ்வரரின் மனதிற்கு மகழ்ச்சி அளிப்பவளே.

சாரமுனி என்னும் மகாமுனிவர், , தன் உடலின் இயலாமையால்  மலை மேல் உள்ள ஈசனை காண முடியவில்லையே என்று தாபப்பட்டுக்கொண்டார். அவரின் விருப்பத்திற்காக அதே மாத்ருபூதேசன், கீழே ஸ்ரீ நாகநாதராக, நந்தி கோவில் தெருவில் உள்ள கோவிலில், இன்றும் காட்சித் தருகிறார். நகநாதர் என்றே அவரின் பெயர். நக என்றால் மலை. நகநாதர் என்ற பெயர் மருவி நாகநாதர் என்றானது. இது ப்ரம்மாண்ட புராணத்தில், த்ரிசிரகிரி மாஹாத்மியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே சாரமுனிவரின் சிரத்தில் தோன்றிய வெண்ணாவல் மரநிழலின் கீழே, அப்பு லிங்கமாக, ஸ்ரீ ஜம்புகேஸ்வரர், திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள திருவானைக்கா என்னும் ஸ்தலத்தில் அருள்பாலிக்கிறார்.

திருச்சிராப்பள்ளி என்னும் ஸ்தலத்தில் ஸ்ரீ கல்யாண மாத்ருபூதேஸ்வரர் என்னும் தாயுமான ஸ்வாமியின் தேவிக்கு, மட்டுவார்குழலி என்று மற்றொரு பெயர் உண்டு. தாயுமான ஸ்வாமிக்கு முதலில் ஜவ்வந்தி நாதர் என்றே பெயர் இருந்தது. ஜவ்வந்தி மலர்கள் நிறைந்த நந்தவனம் சுற்றுவட்டார பகுதிகளில் நிறைந்து இருந்ததால் அவ்வாறு அழைக்கப் பெற்றார். ஸ்வாமிக்கு ஜவ்வந்தி மலர்கள் என்றால் அலாதி ப்ரியம்.

ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் திருச்சிராப்பள்ளி ஈசன் மீது ஸ்ரீ மாத்ருபூதம் என்ற பாடல் பாடியுள்ளார். அதில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சுவாஸித நவ ஜவந்தி புஷ்ப விகாச ப்ரிய ஹ்ருதயம் - அதாவது நல்ல வாசனை நிறைந்த புதியதாய் மலர்ந்த ஜவ்வந்தி பூவின் நறுமணத்தில் நாட்டமுள்ள இதயம் உடையவர் என்று பொருள்.

ரத்னாவதி என்னும் வைஸ்ய குல பெண்ணிற்கு, ஸ்வாமியே நேரில் வந்து, ரத்னாவதியின் தாய் போல் வேடம் தரித்து, ப்ரசவம் பார்த்து, அழகிய ஆண் மகனை ரத்னாவதி ஈன்றெடுக்க உதவியதால், தாயுமானவர் (அ) மாத்ருபூதேஸ்வரர் என்று பெயர் பெற்றார். ஸ்ரீ தீக்ஷிதர் மேலே குறிப்பிட்ட க்ருதியில் வைஸ்யஜாதி ஸ்திரீ வேஷ தரணம் என்று பாடியுள்ளார். வைஸ்யஜாதி பெண் வேடம் பூண்டவர் என்று பொருள்.

ஸ்ரீ லலிதா த்ரிசதி, நக்கீரர், சாரமுனி பற்றிய தகவல்கள் நன்றி:
திரு S.பாலசுப்ரமணியன் (கோனேரிராஜபுரம் - பெங்களூரு)

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Thursday, 25 February 2016

ஸ்ரீ நரசிம்மர்

ராகம்: பிலஹரி
தாளம்: ஆதி (2 கலை)

பல்லவி
ஸ்ரீ நரசிம்மம் பர பிரம்மம்
சிந்தயேஹம் சந்ததம்

அனுபல்லவி
அகிலாண்ட வ்யாப்தம் ஏக ஸ்தம்ப சம்பூதம்
தைத்ய குலாந்தகம் ப்ரஹ்லாத வரதம்

சரணம்
அனந்த கல்யாண குண நிகரம்
வனஜ லோச்சனி ஸஹித ப்ரபாகரம்
விதி சூரேஷாதி வந்தித சரணம்
ஸ்ருதி நிகமாகம ஸ்தோத்ர காரணம்

மத்யம கால சாஹித்யம்
கலிமல ஹரணம் வர நிபுணம்
பிலஹரி ராக ப்ரியம் சுப கரம்
ப்ரதோஷ கால ஆராதித்த வீரம்
ப்ரேத பைசாசாதி பீதி நிவாரணம்

பொருள்:

முன்னுரை:
பெருமாளின் ப்ரபலமாக பேசப்படும் அவதாரங்கள் 10. ஸ்ரீ மத் பாகவதம் ஸ்ரீ மஹா விஷ்ணு 22 அவதாரங்கள் எடுத்ததாக (21 எடுத்து முடிந்தவை, 1 கல்கி இன்னும் எடுக்க வேண்டிய ஒரு அவதாரம்) குறிப்பிடுகிறது. அதில் பக்தனுக்காக உடனடியாக எடுத்த அவதாரம் ஸ்ரீ ந்ருசிம்ஹ அவதாரம். ந்ரு + சிம்ஹம் அதனை நரசிம்மம் என்றும் கூறுவார். நர - மனிதன். சிம்மம் - சிங்கம். சிங்க முகமும், மனித உடலும் கொண்ட அவதாரம்.

ஸ்ரீ வைகுண்டத்தில், வாயில் காப்பாளர்களாக இருவர், ஜெயன், விஜயன் என்று இருந்தனர். பிரம்மாவின் மானச புத்திரர்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனத் குமாரர் ஆகிய நால்வரும், மகாவிஷ்ணுவை காண வைகுண்டம் சென்றனர். வாயிலில், இந்த காவலர்கள் அவர்களை தடுத்தனர். பெருமாள் ஓய்வு எடுத்துக்கொண்டிருப்பதாகவும் இப்போது அவரை காண இயலாது எனவும் கூறினார்.

முனிகள் கோபமுற்று அவர்களை சபித்தனர். வைகுண்டம் விட்டு பூலோகம் செல்ல வேண்டும் என்பதே அந்த சாபம். தங்கள் தவறை உணர்ந்த இருவரும் இந்த சாபத்திற்கு விமோசனம் கேட்டனர். மனம் இரங்கிய முனிகள் நால்வரும், 7 பிறவிக்கு விஷ்ணு பக்தனாக இருக்கவேண்டும். இல்லையேல் 3 பிறவிகள் விஷ்ணுவை வெறுப்பவர்களாக இருக்கவேண்டும் என்று 2 வழிகளை அவர்களுக்கு கொடுத்தனர். சற்று யோசித்த ஜெய-விஜயர்கள், பகைவனாக இருந்தாலும் மூன்று பிறவிகள் தானே பெருமாளை விட்டு பிரிய வேண்டும். பகைவர்களாக 3 பிறவிகளை எடுத்து வர தங்களுக்கு சம்மதம் என்று கூறி பூலோகத்தில் அசுரர்களாக பிறந்தனர்.

க்ருத யுகத்தில் (சத்ய யுகம்) ஹிரண்யாக்ஷன் - ஹிரண்ய கசிபுவாகவும், த்ரேதா யுகத்தில் ராவண-கும்பகர்ணனாகவும், த்வாபர யுகத்தில் சிஷுபால-தந்தவக்ரனாகவும் பிறவி எடுத்தனர்.

சத்ய யுகத்தில் ஹிரண்யாக்ஷனை வராஹ அவதாரம் கொண்டு பெருமாள் வதம் செய்தார். ஹிரண்ய கசிபுவை நரசிம்மமாக வந்து கொன்றார்.

த்ரேதா யுகத்தில் ராமனாக வந்து ராவணனையும், கும்பகர்ணனையும் அழித்தார்.

த்வாபர யுகத்தில் கிருஷ்ணனாக அவதரித்து சிசுபாலன், தந்தவக்ரன் இருவரையும் கொன்றார்.

இறுதியில் இருவரும் வைகுண்டம் சென்றனர். சாப விமோசனம் பெற்றனர்.

ஹிரண்ய கசிபுவின் மகன் ப்ரஹ்லாதன். தன் தாய் லீலாவதியின் கருவில் இருக்கும் போதே, ஸ்ரீ நாரத முனி, ப்ரஹ்லாதனுக்கு நாராயண நாம மந்த்ரத்தை உபதேசம் செய்தார். அதன் விளைவாக, ப்ரஹ்லாதன் பரம விஷ்ணு பக்தனாக பிறந்தான். ஹிரண்ய கசிபு தன் நாட்டில் தன்னையே அனைவரும் துதிக்க வேண்டும், விஷ்ணுவை துதித்தால் அவர்களை கொலை செய்துவிடுவதாக சொல்லி மிரட்டியிருந்தான். அவனது மகன், விஷ்ணுவை மட்டுமே துதித்து வந்தான். அதோடு மட்டும் அல்லாது மற்றவர்களையும் மாற்றிக்கொண்டிருந்தான். இதனால் கோபமுற்ற ஹிரண்ய கசிபு, தன் சொந்த மகனை கொல்லுவதற்கு பல முறை முயற்சி செய்தான்.

மலையிலிருந்து உருட்டினான், கடலுக்கடியில் கல்லோடு கட்டி போட்டன், யானையை கொண்டு மிதிக்க வைத்தான், பட்டினி போட்டன், விஷத்தை கொடுத்தான். ஆனால் ஒவ்வொரு செயலையும் பகவான் முறியடித்தார்.

மலையிலிருந்து தள்ளிய போது பூமா தேவி தாங்கிக்கொண்டாள்.
கடலுக்கடியில் போட்ட போது, வராஹ ரூபமாய் பூமியை காத்தவாறு பெருமாள் ப்ரஹ்லாதனை காத்தார்.
யானையை எய்த போது, யானையின் சினத்தை பெருமாள் தனித்து, ப்ரஹ்லாதனுக்கு அந்த யானை மாலையிட்டது.
பட்டினி போட்ட போது, மஹாலக்ஷ்மி பிராட்டியே சிறையில் அவனுக்கு உணவளித்தாள்.
விஷத்தை கொடுத்த போது, அதனை அம்ருதமாக மாற்றினார் பெருமாள்.

இறுதியில் ஹிரண்ய கசிபு, "யார் அந்த ஹரி? எங்கே இருக்கிறான்?" என்று ப்ரஹ்லாதனை கேட்டான். அதற்கு "தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான். எங்கும் இருப்பான்" என்று ப்ரஹ்லாதன் கூறினான். கோபம் கொண்டு, தூண் ஒன்றை பிளந்தான். அதிலிருந்து ஸ்ரீ நரசிம்மமாக பெருமாள் வெளி வந்தார்.

குழந்தை, எங்கும் இருப்பான் என்று சொன்னதற்காக எல்லா இடங்களிலும் சென்று வ்யாபித்துக் கொண்டார் பெருமாள். இறுதியில் தூணை அரக்கன் பிளந்ததால் அதிலிருந்து வெளிப்பட்டார்.

பின்னர் ஹிரண்யனை சம்ஹாரம் செய்தவை நாம் அறிந்தவையே.

இனி இந்த கீர்த்தனைக்கு வருவோம்.

பல்லவி:
பர பிரம்மமான ஸ்ரீ நரசிம்மரை நாளும் சிந்தனை செய்கிறேன்.

அனுபல்லவி:
அகிலத்தில் எங்கும் வியாபித்திருந்தாலும், ஒற்றை தூணிலிருந்து வெளிப்பட்டார். தைத்யர்களை அழித்தார். ப்ரஹ்லாதனுக்கு அனுக்ரஹம் செய்தார்.

தைத்யர்கள் - திதி தேவியின் புதல்வர்கள். அசுரர்கள். கஷ்யப ப்ரஜபதிக்கு திதி, அதிதி என்று இரு மனைவிகள். திதியின் புதல்வர்கள் அசுரர்கள். அதிதியின் புதல்வர்கள் தேவர்கள்.

சரணம்:
அனந்த கல்யாண குண நிகரம்- முடிவில்லாத, மங்களமான குணங்களின் குன்று/ குவியல்
வனஜலோச்சனி சஹித ப்ரபாகரம் - தாமரை கண்கள் கொண்ட லக்ஷ்மி தேவியோடு கூடிய, அருள் ஒளி வீசும் கரங்கள் உடையவர்.
விதி சூரேஷாதி வந்தித சரணம் - விதி - பிரம்மா, சுரேஷன் - சுரர்களின் (தேவர்களின்) தலைவன் - இந்திரன், ஆகிய பலர் வணங்கும் பாதங்களை கொண்டவர்.
ஸ்ருதி நிகமாகம ஸ்தோத்ர காரணம் - வேதம், உபநிஷத் போன்றவை துதிக்கும் காரணப்பொருளாவார்

மத்யம காலம்:
கலிமல ஹரணம் வர நிபுணம் - கலி தோஷத்தை போக்குபவர். வரங்களை அளிப்பதில் வல்லவர்.

பிலஹரி ராக ப்ரியம் சுப கரம் - பிலஹரி ராகம் என்றால் ந்ருசிம்மனுக்கு அதீத ப்ரியம். மங்களங்கள் நல்கும் கரங்கள் உடையவர்.

ப்ரதோஷ கால ஆராதித்த வீரம் - ப்ரதோஷ காலத்தில் தான், ஹிரண்ய கசிபுவை வதம் செய்தார். அந்த நேரத்தில் நரசிம்மரின் வீரத்தையும் அவரையும் ஆராதித்தால் மிகவும் மகிழ்வார்.

ப்ரேத பைசாசாதி பீதி நிவாரணம் - நரசிம்மர் பூதம், பிரேதம், பைசாசம் (பிசாசு) தொடர்பான பயத்தை போக்கி, தைரியத்தை அருள்வார்.

பஞ்ச முக ஆஞ்சநேய ஸ்துதியில், தெற்கு முகம், நரசிம்மருடையது. அந்த ஸ்லோகம்
ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய
தக்ஷின முகே கரால வதனாய ந்ருசிம்ஹாய
சகல பூத ப்ரேத ப்ரமதனாய ஸ்வாஹா
என்று வரும்.

பஞ்ச முகங்கள்:
கிழக்கு - ஹனுமான்
தெற்கு - ந்ருசிம்ஹர்
மேற்கு - கருடர்
வடக்கு - ஆதி வராஹர்
மேல் முகம் - ஹயக்ரீவர்.

அதர்வ வேதத்தில், ந்ருசிம்ஹ தாபினி உபநிடதத்தில் பூர்வ பாகத்தில், 2-வது அத்தியாயத்தில் ஸ்ரீ நரசிம்மரின் வீரம் பற்றிய மந்திர குறிப்புகள் உள்ளன.

தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் 18-ல் ஒருவரிடம், விஷ்ணுவின் 10 அவதாரங்களில் முக்கியமாக வழிபட வேண்டிய அவதாரங்கள் எவை என்று கேட்டதற்கு, அவர், "எளியன் இடையன் இளிச்ச வாயன்" என்ற பதில் சொன்னார். இடையன் - ஸ்ரீ கிருஷ்ணன்.
எளியன்- ஸ்ரீ ராமன் (வனவாசம் செய்து எளிய வாழ்க்கை மேற்கொண்டமையால் எளியன் என்று சொன்னார் போலும்)
இளிச்ச வாயன் - ஸ்ரீ ந்ருசிம்ஹன் (சிங்கம் தன் வாயை திறந்த படி வைத்திருக்கும் அல்லவா? அதனால், ந்ருசிம்ஹனை இளிச்ச வாயன் என்று சொல்லியிருக்கிறார்).

பாடல் கேட்க:

Check this out on Chirbit