Tuesday 22 March 2016

பஞ்சபூத ஸ்தல கீர்த்தனைகள் - ஆகாசம் - தில்லை (சிதம்பரம்)

ராகம்: நாட்டை 
தாளம்: சதுஸ்ர ஜாதி ஏக தாளம் (திஸ்ர நடை)

பல்லவி:
தில்லை அம்பல வாணனே
சிவகாமி நாதனே சித்சபை வாசனே

அனுபல்லவி:
எல்லை இல்லாப் பெரியோனே 
நல்லோனே நான்மறை நாதனே (தில்லை)

சரணங்கள்:
வல்வினைகள் யாவுமே வல்லவா நின் நாமத்தைச்  
சொல்லிய மறுகணம் நில்லாது மறையுமே 
நல்லிசைப் பாக்களால் நாளும் நின்னைப் போற்றவே 
நல்லருள் புரிந்திடும் நாட்டையும் காத்திடும் (தில்லை)

பதஞ்சலி வ்யாக்ரபாதர் இரு முனிகளும் காணவே
சதங்கை கட்டி ஆடியே பிரபஞ்சத்தை நடத்திடும்
அதிர முழங்கும் உடுக்கையிருந்து அனைத்துமே தோன்றிட 
மதுரமான நகையுடன் தஹராகாசத்துள் உறையும் (தில்லை)

பொருள்:
தில்லை என்னும் க்ஷேத்ரத்தில் உள்ள சபையில் (அம்பலம்) உறைபவனே, சிவகாமியின் நாதனே, சித்சபையில் வசிப்பவனே. சித் - தூய அறிவு. தூய அறிவாக இறைவன் இருக்கிறார்.

முதலும் முடிவும் இல்லாத பெரியவனே. எல்லை இல்லாத ஆகாசம் போன்ற பெரியவன். நல்லோனே - நன்மைகளின் உறைவிடமே, நான்கு மறைகளாலும் பாடப்படும் நாயகனே.

கொடிய வல்வினைகள் அனைத்தும் வல்லவனான இறைவனின் நாமத்தை கேட்டால், அடுத்த நொடியிலேயே, அவ்விடத்தில் நிற்காது ஓடிவிடும்.

நல்ல இசையோடு கூடிய பாடல்களால் அனுதினமும் இறைவனை துதிப்பதால், நமக்கு இறைவன் நல்லருள் புரிவார். நாம் வாழும் நாட்டினையும் காப்பார். நாட்டை என்ற ராகத்தின் முத்திரை இங்கு பொருந்தியுள்ளது.

பதஞ்சலி, வ்யாக்ரபாதர் என்னும் இரு முனிவர்களும் காண, காலில் சதங்கைக்கட்டி ஆடி, பிரபஞ்சத்தில் அனைத்தும் உருவாகி, நடைபெற வழிவகுக்கிறார் நம் நடராஜன். இறைவனின் திருக்கரங்களில் உள்ள உடுக்கையின் சப்தத்திலிருந்து வேதம், உபநிஷத், வ்யாகர்ணம் முதலான வேத அங்கங்கள் போன்ற பல தோன்றின. பல செயல்கள் புரிந்தாலும், முகத்தில் இனிய 
புன்னகை ததும்ப தஹராகாசம் என்னும் இடத்தில் உறைகிறார். 

சிதம்பர ரஹஸ்யம் என்பது தஹராகாச வித்யை என்று சாந்தோக்ய உபநிஷத் மற்றும் ப்ரஹதாரண்யக உபநிஷத் இவ்விரண்டிலும் கூறப்பட்டுள்ளது. புக்தி முக்தி ப்ரத தஹராகாசம் என்று ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் தான் இயற்றிய ஆனந்த நடன பிரகாசம் என்ற கேதார ராக க்ருதியில் பாடியுள்ளார்.

5 தன்மாத்ரங்கள் (சப்த, ஸ்பர்ஷ, ரூப, ரஸ, கந்தம்) - பஞ்ச தன்மாத்ர ஸாயகா என்று அம்பாளுக்கு 1000 நாமங்களில் ஒரு நாமம். அதில் சப்தம் என்னும் ஒலி - ஆகாசத்தை குறிக்கும். ஆகசத்திற்கு ஒலி என்ற ஒரே ஒரு தன்மை மட்டுமே இருக்கிறது.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment