Saturday 12 March 2016

சுகந்த குந்தலாம்பிகா

ராகம்: நாட்டைக்குறிஞ்சி
தாளம்: ஆதி (2 கலை)

பல்லவி:
சுகந்த குந்தலாம்பிகே ஜகதம்பிகே
சுகப்ரதாயிகே ஜனனி மாமவ

அனுபல்லவி:
சகலே சகலலோகநாயிகே
சகலகலாநிபுனே வரதே

சரணம்:
பரிபூர்ண சந்த்ர வதனே
ஹரி சோதரி கிரிராஜ தனயே
த்ரிசிர கிரீஷ நாயிகே லலிதே
சாரமுனி சேவித மாத்ருபூத ஜாயே

பொருள்:
சுகந்தகுந்தலாம்பிகே - வாசம் நிறைந்த கூந்தலை உடைய அம்பிகே.

அம்பாளின் கூந்தலுக்கு இயற்கையாகவே நறுமணம் உண்டு. ஸ்ரீ லலிதா த்ரிசதியில், 30-வது நாமம் - ஏல சுகந்தி சிகுராயை நம: என்று வருகிறது. ஏலக்காய் வாசனை நிறைந்த கூந்தல் உடையவள் என்று பொருள்.

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில், 13 வது நாமம் - சம்பக-அசோக-புன்னாக-சௌகந்திக-லசத்கசாயை நம: என்று வருகிறது. சம்பகம், அசோகம், புன்னாகம், சௌகந்திகம் ஆகிய மலர்களின் வாசத்தை மிஞ்சும் வாசம் நிறைந்த கூந்தல் உடையவள் என்று வர்ணிக்கிறது. இம்மலர்கள், தங்களின் வாசத்தினை பெருக்கிக்கொள்ளவேண்டும் என்பதற்காக அம்பாளின் தலையில் இருக்கவேண்டும் என்று வேண்டியனவாம். அதற்காக அம்பாள் கருணையோடு அவற்றை தன் தலையில் சூடியுள்ளாள்.

சௌந்தர்ய லஹரி - 43 வது ஸ்லோகம்
துனோது த்வாந்தம் ந: துலித-தலித-இந்தீவர-வனம்
ன-ஸ்நிக்த-ச்லக்ஷ்ணம் சிகுர நிகுரும்பம் தவ சிவே
தீயம் ஸௌரப்யம் ஸஹஜம்-உபலப்தும் ஸுமனஸோ
வஸந்த்யஸ்மின் மன்யே வலமதன-வாடீ-விடபினாம்

சொல் - பொருள்:
சிவே - பரமசிவனின் பத்தினியே!
துலித-தலித-இந்தீவர-வனம் - மலர்ந்த கறுநெய்தல் காடு போல் பிரகாசிப்பதும்,
ன-ஸ்நிக்த-ச்லக்ஷ்ணம் - அடர்ந்த-வழவழப்பான-மென்மையான,
தவ சிகுர நிகுரும்பம் - உனது கேச பாரம்,
ந: - எங்களுடைய
த்வாந்தம் - அக இருளை
துனோது - போக்கட்டும்.

தீயம் - அதில் உள்ள
ஸஹஜம்  - இயற்கையான
ஸௌரப்யம் - வாசனையை
உபலப்தும் - அடைய விரும்பி
வலமதன - இந்த்ரனுடைய
வாடீ-விடபினாம் - நந்தவனத்தில் உள்ள மரங்களின்
ஸுமனஸ: - புஷ்பங்கள்
அஸ்மின் - அந்த கேசபாரத்தில்
வஸந்தி - வசிக்கின்றன
மன்யே - என நினைக்கிறேன்

விளக்கம் நன்றி: சௌந்தர்ய லஹரி பாஷ்யம் - ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம் - ஸ்ரீ அண்ணா அவர்கள்.

அபிராமி பட்டர், கனம் தரும் பூங்குழலாள் என்று பாடியுள்ளார்.

இவ்வாறு அன்னையின் கூந்தலுக்கு இயற்கையாகவே மனம் உண்டு என்பதை நக்கீரர் அறிந்திருந்தாலும், மாயையினால் அவர் அதனை மறுத்தார். சிவபெருமானையும் உத்தேசிக்காது மறுத்தார். அதனை துடைதுக்கொள்ளவே, அடுத்த பிறவியில், நக்கீரர், ஸ்ரீ பாஸ்கரராயராக பிறந்து, ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாஷ்யம் செய்தார்.

ஜகதம்பிகே - ஜகத்திற்கு தாயே

சுகப்ரதாயிகே - சுகங்களை அள்ளித் தருபவளே

ஜனனி மாமவ (மாம் அவ) - தாயே, என்னை (மாம்) காப்பாய் (அவ).

சகலே - எல்லாமும் நீயே

சகலலோகநாயிகே - எல்லா உலகினையும் ஆள்பவள் நீயே (பூ, புவ, சுவ, ஜன, தப, மஹ, சத்ய ஆகிய மேல் 7 உலகங்கள் மற்றும் அதல, விதல, சுதல, ரஸாதல, தலாதல, மஹாதல, பாதாள ஆகிய கீழ் 7 உலகங்கள்)

சகல கலா நிபுனே - அனைத்து கலைகளிலும் வல்லவள் அம்பாள்.

வரதே - கலைகளை பக்தர்களுக்கு அளிப்பவள்.

சுகந்த குந்தலாம்பாளை வணங்கினால் ஆயக்கலைகள் 64-ம் நம்மிடம் வந்தடையும். சதுஸ் சஷ்டி கலாமயீ என்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் அம்பாளை அழைக்கிறது.

பரிபூர்ண சந்த்ரவதனே - பௌர்ணமி நிலவினைப் போன்ற அழகிய முகம் உடையவளே. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் சாரு சந்த்ர நிபானனா என்று அழைக்கிறது.

ஹரி சோதரி - ஹரி என்னும் விஷ்ணுவின் சஹோதரியே

கிரிராஜ தனயே - மலையரசனின் புதல்வியே

த்ரிசிரகிரீஷ நாயிகே - திரிசிர மலை நாயகனின் நாயகியே

லலிதே - விளையாட்டாக அனைத்தையும் நடத்துபவளே

சாரமுனி சேவித மாத்ருபூத ஜாயே - சார முனி வணங்கும் மாத்ருபூதேஸ்வரரின் மனதிற்கு மகழ்ச்சி அளிப்பவளே.

சாரமுனி என்னும் மகாமுனிவர், , தன் உடலின் இயலாமையால்  மலை மேல் உள்ள ஈசனை காண முடியவில்லையே என்று தாபப்பட்டுக்கொண்டார். அவரின் விருப்பத்திற்காக அதே மாத்ருபூதேசன், கீழே ஸ்ரீ நாகநாதராக, நந்தி கோவில் தெருவில் உள்ள கோவிலில், இன்றும் காட்சித் தருகிறார். நகநாதர் என்றே அவரின் பெயர். நக என்றால் மலை. நகநாதர் என்ற பெயர் மருவி நாகநாதர் என்றானது. இது ப்ரம்மாண்ட புராணத்தில், த்ரிசிரகிரி மாஹாத்மியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே சாரமுனிவரின் சிரத்தில் தோன்றிய வெண்ணாவல் மரநிழலின் கீழே, அப்பு லிங்கமாக, ஸ்ரீ ஜம்புகேஸ்வரர், திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள திருவானைக்கா என்னும் ஸ்தலத்தில் அருள்பாலிக்கிறார்.

திருச்சிராப்பள்ளி என்னும் ஸ்தலத்தில் ஸ்ரீ கல்யாண மாத்ருபூதேஸ்வரர் என்னும் தாயுமான ஸ்வாமியின் தேவிக்கு, மட்டுவார்குழலி என்று மற்றொரு பெயர் உண்டு. தாயுமான ஸ்வாமிக்கு முதலில் ஜவ்வந்தி நாதர் என்றே பெயர் இருந்தது. ஜவ்வந்தி மலர்கள் நிறைந்த நந்தவனம் சுற்றுவட்டார பகுதிகளில் நிறைந்து இருந்ததால் அவ்வாறு அழைக்கப் பெற்றார். ஸ்வாமிக்கு ஜவ்வந்தி மலர்கள் என்றால் அலாதி ப்ரியம்.

ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் திருச்சிராப்பள்ளி ஈசன் மீது ஸ்ரீ மாத்ருபூதம் என்ற பாடல் பாடியுள்ளார். அதில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சுவாஸித நவ ஜவந்தி புஷ்ப விகாச ப்ரிய ஹ்ருதயம் - அதாவது நல்ல வாசனை நிறைந்த புதியதாய் மலர்ந்த ஜவ்வந்தி பூவின் நறுமணத்தில் நாட்டமுள்ள இதயம் உடையவர் என்று பொருள்.

ரத்னாவதி என்னும் வைஸ்ய குல பெண்ணிற்கு, ஸ்வாமியே நேரில் வந்து, ரத்னாவதியின் தாய் போல் வேடம் தரித்து, ப்ரசவம் பார்த்து, அழகிய ஆண் மகனை ரத்னாவதி ஈன்றெடுக்க உதவியதால், தாயுமானவர் (அ) மாத்ருபூதேஸ்வரர் என்று பெயர் பெற்றார். ஸ்ரீ தீக்ஷிதர் மேலே குறிப்பிட்ட க்ருதியில் வைஸ்யஜாதி ஸ்திரீ வேஷ தரணம் என்று பாடியுள்ளார். வைஸ்யஜாதி பெண் வேடம் பூண்டவர் என்று பொருள்.

ஸ்ரீ லலிதா த்ரிசதி, நக்கீரர், சாரமுனி பற்றிய தகவல்கள் நன்றி:
திரு S.பாலசுப்ரமணியன் (கோனேரிராஜபுரம் - பெங்களூரு)

பாடல் கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment