Saturday 12 December 2015

அம்பாள்

ராகம்: கானடா
தாளம்: ஆதி

பல்லவி
அழைத்த மறு கனம் வருவாயே (நான்)
மழையென அருளை பொழிவாயே தாயே

அனுபல்லவி
பிழை பல செய்தாலும் பொறுத்தருள்வாயே
குழந்தையாம் என்னை பரிவோடு அணைப்பாயே

சரணம்
அகந்தை மமதை தீமை அழிப்பாயே
அடக்கம் நன்னடத்தை அளிப்பாயே
இக பர சுழற்சிகள் போதும் தாயே
இனி என்னை உன்னுள் எற்றுக்கொள்வாயே

பொருள்:
கருணைக்கடலாம் பராசக்தி, நம் யாவருக்கும் அன்னை. அன்னையை வேண்டுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

அன்னையின் பக்தன் (நாம்) அழைத்த மறு நொடி, அன்னை வருவாள். மழையென தன் அருளை பொழிவாள்.

மனிதன் என்றால் பிழை செய்வது அவனது குணம். To Err is human, To Forgive is Divine என்று ஒரு ஆங்கில பழமொழி உண்டு. நம் சனாதன தர்மத்திலும்

கர சரண க்ருதம் வாக் காய ஜம் கர்ம ஜம் வா
ஷ்ரவண நயன ஜம் வா மானசம் வா அபராதம்
விஹிதம் அவிஹிதம் வா சர்வம் ஏதத் க்ஷமஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ சம்போ

என்ற ஒரு ஸ்லோகம் உண்டு. இதில் என் கைகள், கால்கள், செயல்கள், பேச்சு, உடல், காது, கண், மனம் இவற்றாலும், இதில் கூறப்படாத வேறு வழியாலும், தெரிந்தும், தெரியாமலும் செய்த தவறுகளை, கருணாமூர்த்தியான சம்போ, மஹாதேவா, நீ பொறுத்தருள வேண்டும் என்று கூறுவோம்.

அதுபோல, இந்த கீர்த்தனையில், அம்பாளை நாம் செய்த பிழைகளை பொறுத்தருள வேண்டும் என்று வேண்டுகிறோம். மேலும் அன்னையின் குழந்தையாம் நம்மை, பரிவோடு அணைத்துக் கொள்ளுமாறு விண்ணப்பிக்கிறோம்.

நாம் நினைக்கலாம், "தெரியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு உண்டு. தெரிந்தே செய்த தவறை எப்படி மன்னிக்க முடியும்? மன்னிப்பு வாங்கிக்கொண்டு மீண்டும் தவறு செய்தால் என்ன செய்வது?" என்று. மனிதனிடத்தில் தெரிந்து செய்த தவறுக்கு மன்னிப்பு கிடையாது. ஆனால் தெய்வத்திடம் சரணாகதி என்று அடைந்து விட்டால், நிச்சியம் மன்னிப்பு உண்டு. ஒரு முறை கடவுளை வணங்கி மன்னிப்பு கேட்டுவிட்டால், மீண்டும் நம்மால் தவறு செய்ய இயலாது. இது சத்தியம். அதுவே கடவுளின் மகிமை.

நம்மிடம் குடிகொண்டுள்ள அஹங்காரம், மமகாரம், மற்ற தீய குணங்களை அழிக்குமாறும், அடக்கம், நன்னடத்தை இவற்றை அளிக்குமாறும் அன்னையிடம் வேண்டுகிறோம்.

இக பர சுழற்சிகள் (பிறப்பு - இறப்பு),

புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனி ஜடரே சயனம்
இஹ சம்சாரே பஹு தூஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே

என்று பஜ கோவிந்த ஸ்தோத்திரத்தில் ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாள் கூறியது போல், சம்சாரத்திலிருந்து விடுவிக்க வேண்டுகிறோம். சுழற்சி போதும் என்று கூறுகிறோம்.

சுழற்சி நின்ற பின்னர், தன்னுள்ளேயே நம்மை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கிறோம். இதுவே ஸாயுஜ்ய முக்தி எனப்படும். மிக உயர்ந்த பதவி ஸாயுஜ்ய பதவி. அத்வைத நிலை அதுவே. அஹம் பிரஹ்மாஸ்மி, தத் த்வம் அஸி, என்ற மஹா வாக்யங்களின் சாரம் அதுவே.

பவானி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் ஸ கருணாம் 
இதி ஸ்தோதும் வாஞ்சம் கதயதி பவானி த்வம் இதி ய:
ததைவ த்வம் தஸ்மை திசஸி நிஜ ஸாயுஜ்ய பதவீம் 
முகுந்த ப்ரம்மேந்திர ஸ்புட மகுட நீராஜித பதம் 

என்று சௌந்தர்ய லஹரியில் 22-வது ஸ்லோகம். 

"பவானி, நீ உன் பக்தன் மீது கடைக்கண் பார்வையால் கருணை பொழி" என்று ஒருவன் வேண்ட நினைத்து, "பவானி, நீ.." என்று கூறிய உடன், அவனுக்கு, "நீயே பவனி" என்று ஸாயுஜ்ய பதவியை கொடுத்து விடுகிறாய். இந்த பதவி விஷ்ணு, பிரம்மா, இந்திரன் போன்றோர் அன்னையின் பாதத்தை தங்கள் மகுடத்தில் உள்ள ரத்னங்களால் அபிஷேகம் செய்து பின் பெற்றனர். என்னே உனது கருணை!? என்று சங்கரர் மிக வியந்து போற்றுகிறார்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment