Monday, 21 September 2015

முருகன்

ராகம்: காம்போஜி
தாளம்: ஆதி

பல்லவி

அருள்வதைத் தவிர உனக்கென்ன வேலை?
திருக்குமரா முருகா சரவணபவ குஹா

அனுபல்லவி

ஒரு கணமும் மறவாதுன்னை போற்றி
உருகி தவிக்கும் உனது அடிமைக்கு விரைந்து  (அருள்வதை)

சரணம்

மூவாறு விழிகளில் ஒரு விழி பார்த்தாலும்
ஈராறு செவிகளில் ஒரு செவி கேட்டாலும்
ஒருமுறை நீ உன் கரம் ஒன்றை அசைத்தாலும்
இருள் அது விலகும் இதற்கேன் தாமதம்
இருள் அது நீங்கும் இதற்கேன் தாமதம் (அருள்வதை)

குறிப்பு:

இப்பாடல் உரிமையோடு, முருகனிடம் கேட்பதாக எழுதியுள்ளேன்.

மூவாறு - 3 x 6 = 18 விழிகள்
ஈராறு - 2 x 6 = 12 செவிகள்

முருகன், சிவனிடமிருந்து தோன்றியவர். சிவனின் 5 முகங்களான சத்யோஜாதம், தத்புருஷம், ஈசானம், அகோரம், வாமதேவம் மற்றும் 6-வது முகமான அதோ முகம் (கண்களுக்கு புலப்படாத முகம்) ஆகியவற்றிலிருந்து தோன்றிய தீப்பொறிகள் பிரம்மாவின் கரங்களில் வீழ்ந்தன.

பிரம்மனால் அந்த வெப்பத்தினை தாங்க இயலாததால், அம்பாள் வாங்கிக்கொண்டு, சரவணப் பொய்கையில் விட்டாள். அங்கே மலர்ந்திருந்த 6 தாமரைகள் அவற்றை ஏற்றுக்கொண்டன. 6 குழந்தைகளாயின அப்பொறிகள்.

பின் கார்த்திகை பெண்கள் அறுவர் 6 குழந்தைகளையும் வளர்த்து வந்தனர். உரிய நேரம் வந்த போது அம்பாள் ஆறு குழந்தைகளை ஒரு உடலாக இணைத்து, கால்கள் 2, முகங்கள் 6, கரங்கள் 12, செவிகள் - 12, கண்கள் 18 கொண்ட அழகிய ஆறுமுகனாக, ஷன்முகனாக வடிவம் கொடுத்தாள்.

சிவனுக்கு 3 கண்கள். சிவகுமாரனுக்கு 3 x 6 = 18 கண்கள். ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதரும் தான் இயற்றிய சுப்ரமண்யேன ரக்ஷிதோஹம் என்ற சுத்த தன்யாசி ராக கீர்த்தனையில் - அஷ்டாதச லோசனா கண்டேன என்று 18 கண்கள் கொண்ட கழுத்துடைய முகத்தோனால் காக்கப்படுகின்றேன் என்று பாடியுள்ளார்.

மற்றபடி பாடலில் உள்ளவை நேராக புரிந்துக் கொள்ளக் கூடியவையே.

பாடல் கேட்க:


Check this out on Chirbit

No comments:

Post a Comment