Tuesday 12 April 2016

பஞ்ச பூத ஸ்தல கீர்த்தனைகள் - நிலம் - காஞ்சிபுரம் (கச்சி ஏகம்பம்)

ராகம்: ஸ்ரீ
தாளம்: கண்ட சாபு

பல்லவி
கச்சி மாநகர் தன்னில்
காட்சி தந்தருள் செய்யும்
ஏகாம்ப்ர நாதன் பதம்
பணிந்து நலம் பெறுவோம்

அனுபல்லவி
அச்சுத சோதரி ஸ்ரீ காமாக்ஷி
அர்ச்சித்து வணங்கிய பூமி தத்துவமான (கச்சி)

சரணம்
ஒற்றை மா மர நிழலில்
ஒன்றிய மனதுடன்
நற்றவம் ஏற்றதோர்
நங்கையாம் அவளின் மேல்
பற்றிய மழுவுடன்
வற்றாத கங்கையும்
எய்தினார் பின் அவள்
அணைக்கவே அருளிய (கச்சி)

பொருள்:
கச்சி (காஞ்சி) என்னும் பெருநகரில் காட்சிக்கொடுத்து ஆட்சி புரியும், ஏகாம்பர நாதனின் பதம் பணிந்து நலம் பெறுவோமாக.

நகரேஷு காஞ்சி என்று காளிதாசனால் புகழப்பட்ட பெருநகரம் காஞ்சிபுரம்.

அச்சுதனின் சஹோதரி ஸ்ரீ காமாக்ஷி, மண்ணினால் லிங்க வடிவத்தை அமைத்து, சிவபெருமானை வழிபட்டாள். அதனாலேயே இந்த ஸ்தலம், பஞ்ச பூதங்களுள், ப்ரிதிவி (நிலம்) ஸ்தலமாக கருதப்படுகிறது.

ஒரு மா மரத்திற்கு அடியில், அம்பாள் தவம் மேற்கொண்டாள். அவளை சோதனை செய்வதற்காக இறைவன், தன் கையில் உள்ள நெருப்பினை விட்டார். அம்பாள் தன் சஹோதரன் வரதனை உதவிக்கு அழைத்தாள். வரதனின் சுதர்ஷன சக்ரம் அம்பாளுக்கு உதவி புரிந்து, அவள் தவத்தை மேலும் தொடர வழி வகுத்தது.

பின்னர், இறைவன், தன் தலையில் பாயும் கங்கையை ஏவினர். மண்ணினால் செய்த லிங்கமாயிற்றே என்று அம்பாள், லிங்கத்தினை, வெள்ளம் அடிதுச்செல்லாமல் இருக்க, தன் இரு கைகளாலும் அணைத்துக்கொண்டாள். இறைவன், அன்னையின் தவத்தை மெச்சி. காட்சிக்கொடுத்தார்.

ஏகாம்ப்ரநாதர் - ஏக + ஆம்ப்ர + நாதர்.
ஏக - ஒன்று
ஆம்ப்ர - மாம்பழம்

ஒரு மாமரத்திற்கு கீழ் அன்னைக்கு காட்சி கொடுத்ததால், இறைவன் ஏகாம்பரநாதன் என்று அழைக்கப்படுகிறார். இங்கே அந்த ஒற்றை மாமரத்தில் நான்கு வகையான மாங்கனிகள் காய்க்கும் என கூறுவார். வேதமே மாமர உருவில் உள்ளது. 4 வகை மாங்கனிகளாய், 4 வேதங்களும் விளங்குகின்றன என்று ஐதீகம்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

2 comments:

  1. The composition and sri raga rendition fine.you made our summer evening very pleasent saran. We love it.💐

    ReplyDelete
  2. The composition and sri raga rendition fine.you made our summer evening very pleasent saran. We love it.💐

    ReplyDelete