Thursday 1 October 2009

மகா சிற்பங்கள்

இந்த கவிதை சிவகாமியின் சபதம் நூல் படித்த பின் எழுதப்பட்டது. கல்கி அவர்களின் எழுத்து மாமல்லபுரத்தின் சிற்ப அழகினை நம் கண் முன் நிறுத்தியது. நவீன யுக எழுத்தாளர்களின் தலைவராக திரு கல்கி அவர்களை நான் கருதுகிறேன். அந்த தலைவனுக்கு இந்த கவிதை அர்ப்பணம்.

அலைகடல் மோதும் கடற்கரை பகுதி
மலையும் கடலும் அடர்ந்த தொகுதி
வலைப்பிடித்து மீன் பிடிக்கும் மீனவர் மத்தியில்
உளி பதித்து ஒலி கிளப்பும் சிற்பிகள் தோன்றினர்

வெறுமைக்கொண்ட பாறையை கண்டான்
விண்ணவர் போற்றும் விந்தை புரிந்தான்
ஏறுக்கொடியோனின் ஏற்றமிகு கனவினால்
கற்குவியலும் மாறியதே கற்கோவிலாய்

மாறுபடும் கருத்தில்லை மாமல்லபுரம் மகத்தானது என்பதற்கு
வேறுபடும் விதங்களில் வேலைப்பாட்டு ஜாலங்கள்
காலம் மாறும் கோலும் கைமாறும்
மாறா வனப்புடன் மகிமை பெருகி

மண்ணுயிர் உள்ளவரை ஏன் மண்ணுயிர் அழிந்த பிறகும்
மகோன்னதம் பெற்று விளங்கும்
மகேந்திரனிடமிருந்து மாமல்லன் வழியாக இந்த
மேதினிக்கு கிடைத்த மகா சிற்பங்கள்


No comments:

Post a Comment